அமுலுக்கு போட்டியாக களமிறங்கும் நந்தினி... அதுவும் டி20 உலகக் கோப்பையில் - என்ன விஷயம்?

Sun, 21 Apr 2024-8:53 pm,

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

 

இந்த தொடரில் 20 அணிகள் முதல் சுற்றில் பங்கேற்கின்றன. 20 அணிகளும் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த பிரிவில் அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளனர். 

 

இந்நிலையில், வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு கர்நாடக அரசின் நந்தினி பால் நிறுவனம் ஸ்பான்சர் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. நந்தினி நிறுவனம் தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை போன்றது.

 

கர்நாடக பால் கூட்டமைப்பின் (KMF) பால் தயாரிப்பு பொருள்களின் பிராண்டான நந்தினி இதுகுறித்து அறிவித்துள்ளது. இதற்காக, Nandini Splash என்ற எனர்ஜி டிரிங் ஒன்றையும் அந்நிறுவனம் இந்த டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதனை உலகம் முழுவதும் சந்தைப்படுத்த உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கர்நாடக பால் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனரான எம்.கே.ஜெகதீஷ் ஊடகம் ஒன்றில் கூறுகையில், "இந்த தகவல் உண்மைதான். உலக கோப்பை கிரிக்கெட்டில் இரு அணிகளுக்கும் ஸ்பான்சர் செய்ய திட்டமிட்டுள்ளோம். எனர்ஜி டிரிங் ஒன்றை இங்கு அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த உலக கோப்பையில் இதை மையமாக வைக்க திட்டமிட்டுள்ளோம். இது உலகம் முழுவதும் கொண்டுச்செல்லப்படும்" என்றார். 

 

அயர்லாந்து அணி இந்தியாவுடன் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஸ்காட்லாந்து அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஓமன் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 

 

அமுல் நிறுவனத்திற்கும், நந்தினி நிறுவனத்திற்கும் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு அமுல் நிறுவனம் ஸ்பான்சராக செயல்பட்ட நிலையில், தற்போது நந்தினியும் கிரிக்கெட் ஸ்பான்சர்ஷிப்பில் களமிறங்கியுள்ளது. 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link