கேரளாவின் ‘அத்திப்பட்டி’ வரைபடத்தில் இருந்தே காணாமல் போனதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்
வரலாறு காணாத நிலச்சரிவு என்னும் பெருந்துயரில் சிக்கி தவிர்க்கிறது கேரளாவின் வயநாடு பகுதி. மண்ணோடு மண்ணாக மக்கள் புதைந்துபோய் இருக்கும் இந்த கோரச்சம்பவம், உணர்ச்சியுள்ள மனிதர்கள் எல்லோரின் மனதையும் கசக்கி பிழிந்துவிட்டது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மெப்படி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
7 கிலோ மீட்டர் வரை ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி 500க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின. பல கிராமங்கள் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணில் புதைந்து போய்விட்டன.
வீடு, கார் உள்ளிட்ட ஆசை ஆசையாக மக்கள் வாங்கி வைத்திருந்த பொருட்களும், வீட்டு உரிமையாளர்களுடனே மண்ணில் புதைந்ததுவிட்டன. ஆறு நாட்களுக்கும் மேலாக தொடரும் மீட்பு பணியில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பலரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றன. அத்துடன் சிலரின் உடல்கள் இன்னும் கிடைக்கவே இல்லை. மண்ணோடு மண்ணாக புதைந்துவிட்டதால் அவர்களின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் சிலரின் உடல்கள் எல்லாம் ஆற்றில் 90 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் கிடைந்த துயரமும் அரங்கேறியது. இதனால் ஆற்றின் வழிநெடுகிலும் இருக்கும் பாறைகளின் இடுக்குளில் உடல்கள் ஏதும் சிக்கியிருக்கிறதா எனவும் தேடப்பட்டு வருகிறது.
சூரல்மலையில் ஒரு பெண்ணின் கை மட்டுமே கிடைத்த நிலையில், அதில் அவர் அணிந்திருந்த மோதிரத்தை வைத்து அப்பெண்ணின் அடையாளம் காணப்பட்டு, அவருக்கு இறுதிச்சடங்கும் குடும்பத்தினர் செய்திருக்கின்றனர். அப்போது குடும்பத்தினரின் கதறல் மனதை கசக்கி பிழிவதுபோல் இருந்தது.
எங்கு பார்த்தாலும் பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், உறவினர்களை இழந்த குடும்பத்தினரின் மரண ஓலங்கள் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இன்னும் குறையவில்லை.
மண்ணுக்குள்ளே புதைந்திருந்தாலும் ஏதாவதொரு வாய்ப்பில் உயிர்பிழைத்திருக்க மாட்டார்களா? என்ற ஏக்கம் அங்கு இருக்கும் மக்களின் கண்களில் தெரிகிறது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக மூன்று நாட்களுக்குப் பிறகெல்லாம் ஒரு குடும்பத்தினர் உயிரோடு மீட்கப்பட்டிருக்கின்றனர்.
தேசிய மீட்பு படையினரும், தன்னார்வலர்களும் தொடர்ச்சியாக காணமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் தான் பூஞ்சேரி மட்டம் என்கிற பகுதியே நிலச்சரிவில் முற்றிலும் காணமல் போய்விட்டது என்ற அதிர்ச்சி தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேப்பில் அப்பகுதியே இல்லை என தெரிவித்திருக்கும் அதிகாரிகள், அந்த கிராமத்தையொட்டி இருக்கும் பகுதிகளில் இனி மக்கள் வாழ்வதற்கு அனுமதி கொடுக்கப்படாது என்றும் கூறியுள்ளனர்.
கேரளாவின் அத்திப்பட்டியாக மாறியிருக்கும் பூஞ்சேரி மட்டம், வயநாடு நிலச்சரிவு என்ற கோரதாண்டவத்தில் காணாமல்போன கரும்புள்ளியாக மாறியுள்ளது.