விடாமுயற்சி இல்லை... 2025 பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன படங்கள் ரிலீஸ்...?
புத்தாண்டு தினத்தன்று நல்ல செய்தி வெளியாகும் என எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு, 2025 பெரும் ஏமாற்றத்துடன் தொடங்கியிருக்கிறது எனலாம். ஆம், அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிவைக்கப்படுகிறது என லைகா நிறுவனம் அறிவித்தது. எப்போது ரீலிஸ் என்பதும் அறிவிக்கப்படாதது ரசிகர்களை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரிலீஸ் இல்லை என அறிவித்த உடன் பல்வேறு படங்கள் பொங்கல் ரேஸிற்கு வருவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில், தற்போது வரை பொங்கல் ரேஸில் இருக்கும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
வணங்கான்: இயக்குநர் பாலா மற்றும் நடிகர் அருண் விஜய் கூட்டணியில் உருவாகி உள்ள வணங்கான் (Vanangaan) திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன. 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவும் திட்டமிட்டப்படி வெளியாகிறது.
கேம் சேஞ்சர்: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பான் - இந்தியா படமாக தயாராகி உள்ள 'கேம் சேஞ்சர்' (Game Changer) திரைப்படமும் ஜன.10ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆகிறது. தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு RRR படத்திற்கு பிறகு சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படம் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
காதலிக்க நேரமில்லை: வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்களுக்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கத்திலும், ஜெயம் ரவி நடிப்பிலும் உருவாகியிருக்கும் 'காதலிக்க நேரமில்லை' (Kadhalika Neramillai) திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜன. 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மெட்ராஸ்காரன்: மலையாள நடிகர் ஷான் நிகாம் தமிழில் அறிமுகமாகி உள்ள இந்த திரைப்படம் (Madraskaaran) பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கலையரசன், கருணாஸ், பிக்பாஸ் ஜஸ்வர்யா தத்தா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
Ten Hours: நடிகர் சிபிராஜ் நடிப்பில் தயாராகி இருக்கும் இந்த படம் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது. சின்ன பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் கிரைம் த்ரில்லராக திரைக்கு வருகிறது.