விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக-கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதம்!
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை, புதுச்சேரியில் திமுக, தோழமைக் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
"விவசாயிகள் இதற்கு எதிராக 23 நாட்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) கூறினார்.
"பாஜக தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக மூன்று சட்டங்களை இயற்றியுள்ளது. இதற்கு எதிராக விவசாயிகள் 23 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினருடன் முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான உண்ணாவிரதத்தில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியனும் பங்கேற்றுள்ளார். காங்கிரஸ் உண்ணாவிரதத்தில் பங்கேற்காத திமுக-வினர் திருபுவனையில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 வரை அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் - பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்” நடைபெறும் என்று திமுக, கூட்டணி கட்சியினர் தெரிவித்து இருந்தனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து புது டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தடையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பச்சை நிற மாஸ்க் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரதத்தில் முத்தரசன், கனிமொழி, பாரிவேந்தர், ரவிபச்சமுத்து, வைகோ, திருநாவுக்கரசர், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.