ஆப்பிரிக்காவை தாண்டிய குரங்கு அம்மை: இந்த நாட்டில் ஒருவர் பாதிப்பு.. பீதியில் உலக நாடுகள்
கொரோனா வைரசால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இப்போதுதான் உலகம் மெதுவாக மீண்டு வருகின்றது. அதன் பின்னர் அவ்வப்போது பல வைரஸ்கள் மனித குலத்தை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் மங்கிபாக்ஸ் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதன் தீவிரம் அதிகமாகி வருவதால் உலக சுகாதார அமைப்பும் (WHO) இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மையால் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை ஆப்பிரிக நாடுகளில் மட்டுமே இந்த வைரஸ் இருந்த நிலையில், இப்போது, ஆப்பிரிக்க கண்டத்திற்கு வெளியே ஸ்வீடனில் ஒருவர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பான WHO, சமீபத்தில் குரங்கு அம்மையை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக, மங்கிபாக்ஸின் மிகவும் ஆபத்தான மாறுபாடு வெளிப்பட்டுள்ளது. இந்த நோய் 13 நாடுகளில் பரவியுள்ளது. இருப்பினும், குரங்கு அம்மையின் பெரும்பாலான வழக்குகள் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. தற்போது ஐரோப்பிய நாடான ஸ்வீடனிலும் இந்த நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஸ்வீடனிலும் குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்வீடனின் சுகாதார அமைச்சர் ஜேக்கப் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். முந்தைய வகைகளை விட இது மிகவும் ஆபத்தானது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தால் இந்த வைரஸ் பரவுகிறது.
குரங்கு அம்மையின் அறிகுறிகள் பொதுவான காய்ச்சல் போன்றே இருக்கும் என கூறப்படுகின்றது. இது உடலில் வெடிப்புகளையும் கொப்பளங்களையும் ஏற்படுத்துகிறது.
குரங்கு அம்மையின் பழைய மாறுபாடான Clade I, காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC)) தோன்றியது. இந்த வகையின் மாறுபாடான Clade Ib, Clade I -ஐ விட மிக கொடியதாக கருதப்படுகின்றது. குரங்கு அம்மை, பாதிக்கப்பட்டுள்ள நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலமோ அல்லது உடலுறவு கொள்வதன் மூலமோ ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
இந்த வாரம் ஆப்பிரிக்காவில் 17 ஆயிரம் பேர் மங்கிபாக்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் ஓராண்டில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடாவிலும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளின் அரசுகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு WHO உத்தரவிட்டுள்ளது.
மங்கிபாக்ஸ் ஒரு தொற்று நோயாகும். இது 1970 ஆம் ஆண்டில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸில் கிளேட் I மற்றும் கிளேட் II என இரண்டு வகைகள் உள்ளன. இந்த இரண்டு வகைகளில் கிளேட் I மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது. இது பல தசாப்தங்களாக மத்திய ஆபிரிக்காவின் காங்கோ படுகையில் தன் கோர முகத்தை காட்டி வருகின்றது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் முதல் பாதியில் மங்கிபாக்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக WHO தரவுகள் தெரிவிக்கின்றன. ஜனவரி 2022 மற்றும் ஆகஸ்ட் 4, 2024 க்கு இடையில் ஆப்பிரிக்காவில் 38,465 பேர் மங்கிபாக்சால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிரிக்காவின் CDC தெரிவிக்கின்றது.