Mpox vaccine: குரங்கு அம்மை வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் சீரம் நிறுவனம்
கொரோனா பரவலை அடுத்து, அனைவருக்கும் பீதியை கிளப்பும் வகையில், பரவி வருகிறது. ஆப்பிரிக்காவின் காங்கோவில் தொடங்கிய குரங்கு அம்மை தொற்று, ஸ்வீடன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் பரவியதுடன் இந்தியாவின், அண்டை நாடான பாகிஸ்தான் வரை வந்துவிட்டது.
இந்தியாவில் குரங்கு அம்மை பரவல் இல்லை என்றாலும், பரவல் ஏற்படுவதை தடுக்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தயார்நிலை குறித்து அமைச்சர் ஜே.பி.நட்டா கடந்த சனிக்கிழமையன்று மூத்த அதிகாரிகளுடன் முக்கிய கூட்டம் நடத்தி ஆலோசனை செய்தார்.
கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் குரங்கு அம்மை வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
குரங்கு வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள உலகளாவிய சுகாதார அவசரநிலையை கருத்தில் கொண்டு, கோடிக்கணக்கான மக்களுக்கு உதவும் வகையில் தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றும் இன்னும் ஓராண்டுக்குள் இது தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குரங்கு அம்மை வைரஸ் பாதிக்கப்பட்டவருடன் நேரடித் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் பயன்படுத்திய உடைகள், பிற பொருட்கள், ஆகியவற்றன் மூலம் இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
குரங்கு அம்மை வைரஸ் தொற்று உள்ள விலங்குகளை தொடுவதாலும் அல்லது தொற்று உள்ள விலங்குகள் கடிப்பதாலும் இந்த வைரஸ் மனிதர்களுக்குள் நுழையும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Mpox வைரஸ் தொற்று அறிகுறிகள்: குரங்கு வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின், கைகள், கால்கள், மார்பு, முகம் அல்லது வாயில் அல்லது பிறப்புறுப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரிப்பு ஏற்படும். இறுதியில் இவை கொப்புளங்களாக உருவாகின்றன. தொடர் காய்ச்சல், தலைவலி மற்றும் தசை வலி ஆகியவை இதன் மற்ற அறிகுறிகளாகும்.
அறிகுறிகள் எவ்வளவு காலம் நீடிக்கும்?....குரங்கு அம்மை வைரஸ் தாக்கிய 21 நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) கூறியுள்ளது. ஒரு நோயாளிக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த சிகிச்சையும் இல்லாமல் கூட குணமடைய முடியும் என்று CDC கூறுகிறது.
குரங்கு அம்மை வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை: MPOX க்கு இன்னும் குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும், உலக சுகாதார அமைப்பு (WHO) வலி மற்றும் காய்ச்சல் போன்ற அதன் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்து கொடுக்குமாறு பரிந்துரைக்கிறது. அவருக்கு கவனிப்பு மட்டுமே தேவைப்படும்.