மும்பையின் முன்னாள் வீரருக்கு வலைவீச்சு - லக்னோ அணி கொடுக்கும் பெரிய பொறுப்பு
கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி குறித்து கடந்த சில நாள்களாகவே பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொனேகா - கேப்டன் கேஎல் ராகுல் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு பல்வேறு புதிய தகவல்களை கிளப்பியது.
ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு கேஎல் ராகுலை லக்னோ அணி தக்கவைக்கிறது என்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.
தொடர்ந்து, முதல் இரண்டு சீசன்களில் சிறப்பாக செயல்பட்டாலும் கடந்த சீசனில் லக்னோ அணி சற்று சுமாராகவே செயல்பட்டது.
2022, 2023இல் பிளே ஆப் வரை வந்த லக்னோ அணி, கடந்த முறை 7ஆவது இடத்தில்தான் நிறைவுசெய்தது. கேஎல் ராகுல் காயம் காரணமாக சில போட்டிகளில் நிக்கோலஸ் பூரன் கேப்டனாக செயல்பட்டார்.
லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கௌதம் கம்பீர், கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்டார். மார்னே மார்கலும் தற்போது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் அவரும் லக்னோ அணியில் இருந்து விலகுவார்.
கௌதம் கம்பீர் இல்லாத லக்னோ அணி சற்று தட்டுதடுமாறிய விளையாடியது. ஜஸ்டின் லாங்கர், லான்ஸ் க்ளூசனர், மார்னே மார்கல் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் இருந்தாலும் இந்திய சூழலை நன்கு அறிந்தவர்கள் இல்லாமல் போனது பெரிய பிரச்னையானது. மார்னே மார்க்லும் இல்லாதது இன்னும் சற்று சிக்கலை உண்டாக்கும்.
அந்த வகையில், ஜாகிர் கானை ஆலோசகராக கொண்டுவர லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முடிவெடுத்துள்ளது. அவர் 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்தார். அதுமட்டுமின்றி, பல்வேறு லீக்குகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பொறுப்பிலும் இருந்தார். தற்போது, மார்னே மார்கல், கம்பீர் இடத்தை நிரப்ப ஜாகிர் கானை ஆலோசகராக லக்னோ அணி நியமிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு இன்று வெளியாகலாம்.