ஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்!
திருநெல்வேலியின் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னதுரை. தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த இவர் மீது ஆகஸ்ட் மாதம் ஜாதி ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டது.
நாங்குநேரியில் சின்னதுரை படிக்கும் அதே பள்ளியை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் முன் விரோதம் காரணமாக ஜாதி ரீதியான தாக்குதல் மேற்கொண்டனர். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது, பெரும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரை தலையிட்டு மாணவனுக்கு பக்கபலமாக செயலாற்றினர்.
தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னதுரை தனது காலாண்டு தேர்வை மருத்துவமனையிலேயே எழுதியதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவரின் கல்விச் செலவை தானே ஏற்றுக்கொள்வதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2023-24ம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில், சின்னதுரையின் தேர்வு முடிவுகளும் வெளியானது. அதில் சின்னத்துரை 600 மதிப்பெண்களுக்கு 469 மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். அதாவது, 78.16 சதவீதத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
தமிழ் பாடத்தில் 71, ஆங்கிலப் பாடத்தில் 93, பொருளாதாரப் பாடத்தில் 42, வணிகவியலில் 84, கணக்குப்பதிவியலில் 85, கணிப்பொறி பயன்பாடு பாடத்தில் 94 என மொத்தம் 469 மதிப்பெண்களை எடுத்துள்ளார்.
சின்னதுரையிடம் அவரது எதிர்கால திட்டம் குறித்து கேள்வி எழுப்பியபோது, ஆடிட்டர் ஆவதே தனது கனவு என அவர் பதிலளித்துள்ளார். மேலும், சின்னதுரைக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, ஜாதிய மோதலால் பாதிக்கப்பட்ட மாணவன், கல்வியே முக்கியம் என்பதை உணர்ந்து கடினமாக படித்துள்ளது குறித்தும் பலரும் பாராட்டி வருகின்றனர். ஒருவரின் வாழ்க்கையில் கல்வி மிக மிக முக்கியமானது என்பதற்கு சின்னதுரை ஒரு எடுத்துக்காட்டு எனவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.