வெறித்தனமாக வீசிய பாகிஸ்தான் வீரர்... நீரஜ் சோப்ரா தங்கத்தை தவறவிட்டது எப்படி?

Fri, 09 Aug 2024-10:01 am,

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் 13ஆவது நாள் போட்டிகள் நேற்று (ஜூலை 8) நடைபெற்றன. ஈட்டி எறிதலின் இறுதிப்போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் வீசி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

 

இறுதிப்போட்டியில் மொத்தம் 12 வீரர்கள் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் முதலில் 3 வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த மூன்று வாய்ப்புகளின் முடிவில் கடைசி 4 இடங்களை வீரர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அடுத்து மீதம் இருக்கும் 8 வீரர்களுக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்படும். ஆக மொத்தம் 6 வாய்ப்புகள் ஆகும். இந்த வாய்ப்புகளில் யார் அதிகம் தூரம் வீசியிருக்கிறார்களோ அவர்களுக்கே தங்கப் பதக்கம் ஆகும். 

 

முதல் சுற்றில், நீரஜ் சோப்ரா சரியான முறையில் ஈட்டியை வீசவில்லை என்பதால் அவருக்கு புள்ளிகள் வழங்கப்படவில்லை. மேலும், நீரஜ் சோப்ராவுக்கு கடுமையான போட்டியை அளிக்கக் கூடியவர்களாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் (Arshad Nadeem), ஜெர்மன் வீரர் ஹூலியன் வெப்பர் (Julian Weber) ஆகியோரும் முதல் வீச்சை சரியான முறையில் வீசவில்லை. 

 

இரண்டாம் சுற்றில்தான், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் அந்த சாதனை தூரத்தை எட்டிபிடித்தார். 92.97 மீட்டர் தூர் வீசி ஒலிம்பிக்கில் புதிய சாதனையை படைத்தார். அப்போதே அவருக்கு தான் தங்கப்பதக்கம் என்பது உறுதியாகிவிட்டது. ஏனெனில், நீரஜ் சோப்ரா இதுவரையில் எவ்வித சர்வதேச, தேசிய போட்டிகளிலும் 90 மீட்டர் மைல்கல்லை எட்டியதே இல்லை. எனவே, நீரஜ் சுமார் 93 மீட்டரை தொட்டால்தான் தங்கம் என்பதால் தங்கம் அர்ஷத் நதீமிற்கு தான் என முடிவாகிவிட்டது. 

 

இருப்பினும், நீரஜ் சோப்ராவும் அவரது இரண்டாவது வாய்ப்பில் 89.45 மீட்டர் தூரம் வீசி அவரது சீசன் பெஸ்ட்டை பதிவு செய்தார். நதீம் முதலிடத்திலும், நீரஜ் இரண்டாவது இடத்திலும் நீடித்தனர். அதன்பின்னர் நடைபெற்ற அடுத்தடுத்த சுற்றுகளில் கிரெனடா நாட்டு வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் தூரத்தையும், செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஜக்குப் வட்லெஜ் 88.50 மீட்டர் தூரத்தையும் பிடித்தனர். இவர்கள் யாரும் நீரஜ் சோப்ராவை நெருங்கக் கூட இல்லை. குறிப்பாக யாரும் 89 மீட்டரை தொடவே இல்லை. 

 

நீரஜ் சோப்ராவை யாரும் நெருங்காதது போல, நதீமை நீரஜ் சோப்ராவால் கூட நெருங்க முடியவில்லை எனலாம். நீரஜ் சோப்ரா இரண்டாவது வாய்ப்பை தவிர்த்து மற்ற 5 வாய்ப்புகளிலும் சரியாக வீசவில்லை. மறுபுறம் நதீம் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க த்ரோவுக்கு பின்னர், அடுத்தடுத்து சுமாராகவே வீசினார். ஆனால், கடைசி வாய்ப்பில் மீண்டும் 90 மீட்டர் இலக்கை தாண்டினார். அதில் 91.79 மீட்டர் தூரத்தை பதிவு செய்தார். இதனால், 92.97 மீட்டர் வீசியதற்காக நதீம் தங்கப் பதக்கத்தையும், 89.45 வீசியதால் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் வீசி வெண்கலத்தை பெற்றார். 

 

சிறுவயதில் இருந்தே ஒலிம்பிக்கில் பங்கேற்று நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் விளையாடிய நதீமின் கனவு நேற்று நிறைவேறியது. 2015இல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற நதீம் 2016இல் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியில் 78.33 மீட்டர் தூரத்தை வீசி வெண்கலம் வென்றிருந்தார். இதுதான் அவர் தொடங்கிய இடம் எனலாம். இந்தியாவுக்கு பாரிஸ் ஒலிம்பிக்கில் 5ஆவது பதக்கம் இதுவாகும். அதில் முதல் வெள்ளிப் பதக்கமும் இதுதான்.

 

அதன்பின், கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் 84.62 மீட்டர் தூரத்திற்கு வீசி 5ஆவது இடத்தை மட்டுமே அர்ஷத் நதீம் பிடித்திருந்தார். அதன் பின்னர் தான், அர்ஷத் பீஸ்ட் மோடுக்கு மாறினார். 2022 ஜூலையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 5ஆவது இடத்தை பிடித்தாலும் (86.16 மீட்டர்), அடுத்து 2022 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் 90.18 மீட்டர் வீசி தங்கப் பதக்கத்தை வென்றார். அதேபோல் 90 மீட்டர் தூரத்திற்கு வீசிய முதல் ஆசிய ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். 2023 உலக சாம்பியன்ஷிப் தொடரில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற போது, நதீம் வெள்ளிப் பதக்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link