உறக்கமின்மைக்கும் உடல் பருமனுக்கும் என்ன சம்பந்தம்? அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் இதோ
தேவையை விட குறைவாக தூங்கினால், நம் உடல் நலம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அது உடல் எடையையும் அதிகரிக்கச்செய்யும் என்று கூறினால் நம்மில் பலர் நம்பாமல் போகலாம். ஆனால், அது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். கடந்த சில ஆண்டுகளில் மக்களின் உறக்கம் எவ்வளவு குறைந்துள்ளதோ, உடல் பருமன் பிரச்சினை அதே விகிதத்தில் அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
பல ஆராய்ச்சியாளர்கள் உடல் எடைக்கும் தூக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று கண்டுபிடிக்க பல ஆய்வுகளை நடத்தினர். இந்த ஆய்வுகளில் வெளிவந்த பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால், உறக்கத்தின் அளவு குறைவதாலோ, அல்லது, இரவில் 7 முதல் 8 மணிநேர உறக்கம் இல்லாமல் இருப்பதாலோ பசியைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது. இதனால்தான் உடல் பருமன் முதல் இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் டைப் 2 நீரிழிவு வரையிலான கடுமையான நோய்கள் உடலைத் தாக்குகின்றன.
ஜமா இன்டர்னல் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு நபர் வெறும் 15 நிமிடங்கள் குறைவாக தூங்கினால் கூட, அவரது எடை இதன் காரணமாக அதிகரிக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில், 1 லட்சம் 20 ஆயிரம் பேரின் தூக்கத்தின் தரம் 2 ஆண்டுகளாக கண்காணிக்கப்பட்டது. இதற்காக ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் உடற்பயிற்சி டிராக்கர்களில் தூக்க செயலிகள் பயன்படுத்தப்பட்டன. உடல் பருமன் என வகைப்படுத்தப்பட்ட 30 க்கும் மேற்பட்ட BMI உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான BMI உள்ளவர்களை விட 15 நிமிடங்கள் மட்டுமே குறைவாக தூங்கினார்கள் என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தூக்கம் முழுமையடையாவிட்டால் பசியை அதிகரிக்கும் ஹார்மோன் வேகமாக அதிகரிக்கிறது. ஒரு நபரால் தூங்க முடியாமல் போகும்போது, கிரெலின் (Ghrelin) ஹார்மோன் உடலில் அதிகரிக்கிறது மற்றும் லெப்டின் ஹார்மோனின் (Leptin) குறைபாடு தொடங்குகிறது என்றும் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. லெப்டின் பசியை அடக்குகிறது மற்றும் எடையை குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் கிரெலின் பசியை அதிகரிக்கிறது மற்றும் எடை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கிறது. எடை அதிகரிப்பு காரணமாக டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயமும் கணிசமாக அதிகரிக்கிறது.
இங்கிலாந்தில் 10 ஆயிரத்தி 308 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், தங்கள் அன்றாட இரவு தூக்கத்தை 7 மணிநேரத்திலிருந்து 5 மணி நேரமாகக் குறைத்தவர்களுக்கு, இதய நோயாலும் பிற உடல் நல குறைபாடுகள் காரணமாகவும் இறக்கும் அபாயம் இரட்டிப்பாகியது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.