பொங்கல் பரிசு டோக்கன் வாங்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? முக்கிய அப்டேட்
தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் (Pongal Gift Token) விநியோகத்தை ஜனவரி 3 ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வீடு வீடாக சென்று விநியோகிக்க உள்ளது. அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகத்தில் ஈடுபட உள்ளனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நேரம், தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். அதனடிப்படையில் டோக்கனில் இருக்கும் தேதியில் பயனாளிகள் ரேஷன் கடைக்கு சென்று தங்களுக்கான தைப்பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை பொறுத்தவரை காலையில் 100 பேர், மாலையில் 100 பேர் என்ற எண்ணிக்கையில் கொடுக்கப்பட உள்ளது.
ஒருவேளை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் பெறாத ரேஷன் அட்டைதாரர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்றால் பெற்றுக் கொள்ளலாம். டோக்கன் வீடு வீடாக கொடுக்கும்போது விடுபட்டிருக்கலாம் அல்லது நீங்கள் வீட்டில் இல்லாமல் இருந்திருக்கலாம். இத்தகைய சூழலில் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்றால் பொங்கல் டோக்கன் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தில் எந்தவிதமான குளறுபடிகளும் நடக்காமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதன்படி கூட்டுறவுத்துறை ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து ஆலோசனையும் கொடுத்திருக்கிறது.
மேலும், முறைகேடுகள் நடந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. பயனாளிகள் ஏதேனும் புகார்கள் தெரிவித்தால் அந்தந்த ரேஷன் கடை ஊழியர்களே நிவர்த்தி செய்யவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் இல்லை என்றால் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படாது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனை பெற்றுக்கொள்ள வேண்டும். பெறாதவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு பொங்கல் பரிசு கிடைக்காது.
இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பில் இலவச வேட்டி சேலை, பச்சரிசி, முழுக்கரும்பு மற்றும் சர்க்கரை இடம்பெற்றிருக்கும். கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்த முந்திரி உள்ளிட்ட பொருட்கள் இம்முறை வழங்கப்படவில்லை. அதேபோல் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்குவது குறித்தும் அரசின் அறிவிப்பில் இடம்பெறவில்லை.
இது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, அடுத்தடுத்து வந்த பேரிடர்களால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பில் அதிகமான பொருட்கள் இடம்பெறவில்லை என்று தெரிவித்தார். இந்த ஆண்டு மேற்கொண்டு புதிய அறிவிப்புகள் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக வர வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து அரசு சார்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
இதனால் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் தனியாக வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. இருப்பினும் இப்போதைய சூழலில் அப்படியான சிறப்பு அறிவிப்புகள் ஏதும் வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.