`ரூ. 30 லட்சம் கோடி... பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல்... புட்டு புட்டு வைத்த ராகுல் காந்தி

Thu, 06 Jun 2024-7:04 pm,

இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய அவர், பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட போலியான கருத்துக்கணிப்புகளை (Exit Poll) வெளியிட்டு ஊழல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கும், வெளிநாட்டு முதலீட்டுக்கும் தொடர்பிருப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதற்கு முன்னர் பங்குச்சந்தை குறித்து பேசியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுவும் தேர்தல் சமயத்தில் பிரதமர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோர் பங்குச்சந்தை குறித்து பேசுவது இதுவே முதல்முறை.

 

பங்குச்சந்தை குறித்து ஏன் பிரதமர் மோடி பேச வேண்டும் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அதிலும், ஜூன் 4ஆம் தேதிக்குள் பங்குகளை வாங்கும்படி மே 13ஆம் தேதியே அமித்ஷா மக்களிடம் கூறுகிறார் என ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். 

 

கருத்துக்கணிப்பை சுட்டிக்காட்டி மோடியும், அமித்ஷாவும் பரிந்துரை செய்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சிலர் பல கோடிகள் சம்பாதிப்பதற்காக மோடியும் அமித்ஷாவும் உதவியுள்ளனர் என்றார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு பின்னர்தான் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வை கண்டன. அதே நேரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பங்குச்சந்தை கடுமையாக சரிந்தன. 

 

அதாவது, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான அடுத்த நாள் 3.39% வரை பங்குச்சந்தை உயர்ந்தது. அதே தேர்தல் முடிவுகள் வெளியான அன்று 6% சரிவை கண்டன. (Image: Rahul Gandhi / X Post)

 

ராகுல் காந்தி மூன்று முக்கிய கேள்விகளை எழுப்பினார். முதலில்,"ஏன் பிரதமரும்,  உள்துறை அமைச்சரும் பங்குச் சந்தையில் குறிப்பிட்ட முதலீட்டை சார்ந்து 5 கோடி குடும்பங்களுக்கு பரிந்துரை செய்தது ஏன்?. மக்களுக்கு முதலீட்டு சார்ந்த அறிவுரை வழங்குவது அவர்களின் பணியா?" என்றார். (Image Credits: Rahul Gandhi / X Post)

 

இரண்டாவது கேள்வியாக,"அவர்கள் ஏன் ஒரே வணிக குழுமத்தைச் சேர்ந்த ஊடகத்திடம் இருவரும் இதுகுறித்து பேட்டியளித்தனர். அந்த வணிக நிறுவனமும் பங்குச் சந்தைகளை தவறாக கையாண்ட குற்றச்சாட்டுக்காக செபி விசாரணையின் கீழ் உள்ளது" என்றார். மூன்றாவதாக,"சந்தேகத்திற்குரிய முதலீட்டாளர்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிவருவதற்கு முந்தைய நாள் பெரும் முதலீடு செய்து, 5 கோடி குடும்பங்களின் பணத்தில் பெரும் லாபத்தை அடைந்துள்ளனர். அந்த வகையில்பாஜகவுக்கும் - போலி கருத்துக்கணிப்பாளர்களுக்கும் - சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது" என கேள்வி எழுப்பியுள்ளார். (IImage Credits: Rahul Gandhi / X Post)

 

இந்திய பங்குச்சந்தையில் நடந்த முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை எனவும் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இதன்மூலம் மட்டும் 30 லட்சம் கோடி ரூபாய் பங்குச்சந்தையில் இழப்பு ஏற்பட்டுள்ளதை ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார். குறிப்பாக, பாஜக 200-220 இடங்களையே வெல்லும் என  உளவுத்துறை அவர்களுக்கு அறிக்கை அளித்தும் மோடியும் அமித்ஷாவும், பங்குச்சந்தை குறித்து மக்களிடம் பேசினர். எனவேதான் விசாரணையை கோருகிறோம் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். (Image Credits: Rahul Gandhi / X Post)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link