விடுமுறை! மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் -தமிழக அரசு
எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல விழுப்புரம் மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் முன்னெச்சரிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மதியத்திற்கு பிறகு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று பிற்பகலுக்கு பின், அரைநாள் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
எந்தெந்த மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்கிறதோ, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பேரிடர் மேலாண்மை குழுவுடன் ஆலோசித்தும் தேவைப்பட்டால் விடுமுறை அளிக்கப்படும். எனவே மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் தற்போது நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி, வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் அடுத்த இரண்டு தினங்களில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள வார் ரூம்மில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தற்போது ஆய்வு மேற்கொண்டுள்ளார். அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் உடன் உள்ளனர்.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு உள்ளது.