500ஆவது விக்கெட்டை ருசி பார்த்தார் அஸ்வின்... குவியும் வாழ்த்துகள்

Fri, 16 Feb 2024-3:55 pm,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தொடர் 1-1 என்ற ரீதியில் சமனில் இருக்கும் நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் நிரஞ்சன் ஷா மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 

 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களையும், ஜடேஜா 112 ரன்களையும், சர்ஃபராஸ் கான் 62 ரன்களையும் குவித்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வுட் 4, ரெஹான் அகமது 2, ரூட், ஆண்டர்சன், ஹார்ட்லி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

5 ரன்கள் போனஸ் என்ற நிலையில், இங்கிலாந்து களமிறங்கிய நிலையில், ஜாக் கிராலி - பென் டக்கெட் இணை முதல் விக்கெட்டுக்கு 89 ரன்களை குவித்தது. இதில் டக்கெட் 39 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 

இந்நிலையில், அஸ்வின் வீசிய 13ஆவது ஓவரில் கிராலி, ரஜத் பட்டிதாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அரங்கில் தனது 500ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். குறிப்பாக, இந்திய அணி சார்பில் டெஸ்டில் 500 விக்கெட்டுகளை எடுக்கும் 2ஆவது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். அனில் கும்ப்ளே முதல் வீரர் ஆவார். 

மேலும், அதிவேகமாக 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 2ஆவது வீரர் ஆவார். அஸ்வின் தனது 98ஆவது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில், முத்தையா முரளிதரன் 87ஆவது போட்டியில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். 

இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் அஸ்வின் இரண்டாம் இடத்தில் உள்ளார். கும்ப்ளே 236 இன்னிங்ஸில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இவர் அவரது 105ஆவது போட்டியில்தான் 500ஆவது விக்கெட்டை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள், ஓடிஐயில் 156 விக்கெட்டுகள், டி20யில் 72 விக்கெட்டுகள் என சர்வதேச கிரிக்கெட்டில் 728 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தி உள்ளார். ஐபிஎல் தொடரில் 171 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link