பங்களாதேஷ் தொடரில் ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது ஏன் தெரியுமா?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பங்களாதேஷ் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் கிட்டத்தட்ட 20 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் ரிஷப் பந்த்.
மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரின் போது, 2வது குழந்தை பிறந்ததால் இடம் பெறாமல் இருந்த விராட் கோலி இந்த தொடரில் விளையாட உள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வில் இருந்து வருகிறார். இலங்கை தொடரில் இடம் பெறாத இவர் இந்த டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ளார்.
இருப்பினும் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது ஷமி இருவரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை. ஐயர் இடம் பெறாததற்கு அவரின் மோசமான பார்ம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபியின் முதல் இன்னிங்ஸில் 9 ரன்கள் மட்டுமே அடித்தார் ஐயர், இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்திருந்தாலும் அவரால் அணியில் இடம் பெற முடியவில்லை.
இன்னும் காயம் முழுவதும் சரியாகாததால் ஷமி பங்களாதேஷுக்கு டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.