திருமண உறவில் வெளி ஆட்கள் மூக்கை நுழைத்தால் என்னவாகும்...? இதை மட்டும் செய்யாதீங்க!
யாருடைய திருமண உறவும், காதல் உறவும் நேர்த்தியான ஒன்றில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும், முரண்பாடுகள் இருக்கும். ஆனால், அனைத்தையும் அரவணைத்து செல்வதுதான் திருமண உறவில் அடிப்படையானது.
அந்த வகையில், திருமண உறவில் வரும் பிரச்னைகளை பேசித் தீர்த்துக்கொள்வதும், பிரச்னைகளில் இருந்து நகர்வதும் தம்பதிகளுக்கு இடையே நடப்பதுதான் ஆரோக்கியமான உறவாகும்.
ஆனால், திருமண உறவின் பிரச்னைகள் உங்களை தாண்டி வெளி நபர்களுக்கு செல்லும்பட்சத்தில் அதன் தீவிரம் அதிகமாகும். திருமணமான புதிதில் அனைத்தையும் பெற்றோரிடத்தில் சொல்வது வாடிக்கையாக இருக்கலாம், ஆனால் அதையே பழக்கமாக வைத்திருப்பது நல்லதல்ல.
தம்பதிகளுக்குள் பிரச்னையை அவர்களே தீர்த்துக்கொள்ளாமல் மூன்றாவது நபரிடம் செல்வதோ அல்லது மூன்றாவது நபரிடம் தங்களது பிரச்னை குறித்து தீர்வு கேட்பதோ பல பிரச்னைகளை வழிவகுக்கும். அந்த வகையில், முக்கிய மூன்று பிரச்னைகளை இங்கு காணலாம்.
மூன்றாவது நபரிடம் சொல்வதன் மூலம் தம்பதிகளுக்கு இடையிலான ரகசியம் என்பது பொதுவெளிக்கு வந்துவிட்டது என அர்த்தம். உங்களுக்குள்ளான தனிப்பட்ட விஷயம் பொதுவெளிக்கு வருவது உங்களின் வாழ்வில் எதிர்மறையான பிரச்னைகளை உண்டாக்கும்.
நீங்கள் உங்களின் நண்பரிடத்தில் பிரச்னைக்கான தீர்வு கேட்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம், அவருக்கு இரு தரப்பு தகவல் தெரியாது. எனவே, அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதும் சரியாகாது, அவரிடம் கேட்பதும் சரியாகாது. அந்த நண்பர் அவரது தனிப்பட்ட உறவில் வெற்றிகரமான மனிதராகவோ அல்லது சொதப்பல் பேர்வழியோ ஏதுவாக வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் உங்களின் திருமண உறவு குறித்து அவருக்கு முழு விஷயமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவரிடம் கேட்பதே தவறாகும்.
மேலும், நீங்கள் பொதுவெளியில் இதை கொண்டு செல்வதன் மூலம் உங்களுக்கும் சமூக அழுத்தம் அதிகரிக்கும். நீங்கள் ஆலோசித்த நபர் அந்த விஷயத்தை வெளியில் கசியவைத்துவிட்டார் எனில், உங்களின் நண்பர்கள் வட்டத்தில் உங்களை குறித்தும், உங்கள் பார்ட்னர் குறித்தும் என்னவெல்லாம் பேசப்படும் என்பதை நினைத்தே உங்களுக்கு பெரும் அழுத்தம் ஏற்படும். எனவே தேவையற்ற அழுத்தத்தை தவிருங்கள்.
இந்த முக்கிய பிரச்னைகளை தீர்க்க உங்களின் கஷ்டங்களையும், பிரச்னைகளையும் நண்பர்களிடத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள். இதனால் மன அமைதி ஏற்படும். ஆனால், அவர்களிடம் தீர்வு கேட்டு அதனை தீவிரமாக செயல்படுத்த விரும்புவதே கேடாகும். (பொறுப்பு துறப்பு: இவை பொதுவான கருத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதற்கு Zee News பொறுப்பேற்காது. )