டெல்லி அணியை என்ன செய்வதென்றே தெரியவில்லை - வெந்து புழுங்கும் ரிக்கி பாண்டிங்!

Sat, 06 Apr 2024-1:18 pm,

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியானது 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. கொல்கத்தா அணியை 272 ரன்கள் வேட்டையாட அனுமதித்த டெல்லி கேபிடல்ஸ் அணி இலக்கை துரத்திய போது 17.2 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

இந்த ஆட்டத்தில் டெல்லி அணி பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி எந்த ஒரு கட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தவில்லை. கேப்டன் ரிஷப் பந்த் இரு முறை கேட்ச் அப்பீல் செய்யாமல் விட்டார். இதில் ஒன்று 39 பந்துகளில் 85 ரன்களை வேட்டையாடிய சுனில் நரைனின் அப்பீல் ஆகும். சுனில் நரைன் 24 ரன்களில் இருந்த போது இஷாந்த் சர்மா பந்து வீச்சை விளாச முயன்ற போது பந்து மட்டை விளிம்பில் பட்டு ரிஷப் பந்த்திடம் தஞ்சம் அடைந்தது.

 

இஷாந்த் சர்மா நிச்சயமாக இது அவுட்தான், முறையீடு செய்வோம் என ரிஷப் பந்திடம் கூறினார். ஆனால் ரிஷப் பந்த் முடிவு எடுத்து அப்பீல் செய்வதற்குள் காலக்கெடு முடிவடைந்தது. டி.வி. ரீபிளேவில் பந்து மட்டையை உரசியபடி செல்வதை ஸ்னிக்கோ மீட்டர் தெளிவாக காட்டியது. டெல்லி அணியின் தோல்விக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது.

 

போட்டி முடிவடைந்ததும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் பேசும்போது, இந்த ஆட்டம் தொடர்பாக வீரர்களின் திறனை மதிப்பிடுவது கடினம். ஆட்டத்தின் முதல் பாதியில் கிட்டத்தட்ட மனவருத்தம் அடைந்தேன். நாங்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தோம். 17 வைடுகள் வீசினோம். 20 ஓவர்களை முழுமையாக வீசி முடிக்க எங்களுக்கு 2 மணி நேரம் ஆனது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மீண்டும் ஒரு முறை 2 ஓவர்கள் பின்தங்கியிருந்தோம். இதனால் கடைசி 2 ஓவர்களில் வெளிவட்டத்தில் 4 பீல்டர்களை மட்டுமே பயன்படுத்த முடிந்தது.

 

மேலும் இந்த ஆட்டத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத பல விஷயங்கள் நடந்தன. ஒரு குழுவாக இதுபற்றி நாங்கள் பேசுவோம். தொடரில் முன்னேற வேண்டுமானால் இவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இதுதொடர்பாக வீரர்கள் அறையில் நிச்சயம் நல்ல விவாதங்கள் நடைபெறும். இரு முறை கேட்ச் தொடர்பாக அப்பீல் செய்யப்படாதது குறித்து ரிஷப் பந்த்திடம் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பீல்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் பந்து மட்டையில் உரசிய சத்தத்தை கேட்டிருக்கிறார்கள். 

 

ஆனால், ரிஷப் பந்த் சத்தம் கேட்டதாக அறியவில்லை. இது சிறிய விஷயங்கள்தான். கொல்கத்தா அணி வீரர்கள் நிறைய விஷயங்களைச் சிறப்பாகச் செய்தனர். அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவதற்கான வழிகளை நாங்கள் கண்டறிய வேண்டும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link