இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலியாவுக்கு உதவுவேன் - ரிக்கி பாண்டிங்
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறது. அந்த அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இந்த தொடரின் வெற்றி அவசியம் என்பதால் இந்தியா, ஆஸ்திரேலியா இரு அணிகளும் சிறப்பாக ஆடி பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்ல முயற்சிக்கும். 2018-19 மற்றும் 2020-21 என இரண்டு முறையும் இந்த தொடரை இந்திய அணியே கைப்பற்றியிருக்கிறது.
அத்துடன் 2014 -15 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி இன்னும் ஒருமுறை கூட இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்றதில்லை. ஆனால், இம்முறை ஆஸ்திரேலியா அணியே பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் கட்டாயம் வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி இரண்டு முறை மட்டுமே 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெற்று இருப்பதாகவும், இம்முறை நான்கு போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறுவது ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாக இருக்கும் என்றும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஐந்து போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரையே விரும்புவார்கள். அப்படியான வாய்ப்பு இந்த தொடருக்கு இருக்கிறதா என எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அப்படி நடத்தப்பட்டால் அது ஆஸ்திரேலிய அணிக்கே சாதகமாக இருக்கும் எனவும் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது, பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கு ஆலோசனை வழங்குவேன் என கூறியுள்ளார். எப்போதும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுவதையே நான் விரும்புவேன் என கூறியிருக்கும் ரிக்கி பாண்டிங், இந்திய அணியை தோற்கடிக்க வியூகங்களையும் சொல்லிக் கொடுப்பேன் என கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் ஓப்பனிங் இறக்குவது பற்றி அணி நிர்வாகம் ஆலோசனை செய்யும் என்றும், கேம்ரூன் கிரீனை ஓப்பனிங் இறக்க முயற்சிக்கலாம் என்றும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.