கெட்ட கொழுப்புக்கு குட் பை சொல்ல இந்த ஆரோக்கியமான உணவுகள் உதவும்: கண்டிப்பா சாப்பிடுங்க
கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் உடலில் பல வித பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இது மாரடைப்பு, இதய செயலிழப்பு, மூளை பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆகையால் கொலஸ்ட்ரால் அளவை எப்போதும் கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும்.
பல எளிய, இயற்கையான வழிகளில் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம். எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் இவற்றின் மூலம் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க முடியும். தமனிகளில் இருந்து கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற உதவும் சில இயற்கையான வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சோம்பு: சோம்பு இயற்கையான வழியில் நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது. இதில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது கொலஸ்ட்ராலையும் குறைக்கும் என்பது மிகச் சிலருக்குத்தான் தெரியும். இதற்கு சோம்பை இரவில் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி அந்த தண்ணீரை குடிக்கலாம்.
இஞ்சி: இஞ்சி நமது உடலில் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. நீங்கள் அதை பச்சையாகவோ அல்லது மூலிகை தேநீர் வடிவிலோ உட்கொள்ளலாம். எடை இழப்பிலும் இஞ்சி உதவும். அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதில் அதிகமாக உள்ளன. இது நரம்புகளில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காயில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவற்றின் உதவியுடன் கொலஸ்ட்ரால் அளவை எளிய வழியில் குறைக்கலாம். இதற்கு தினமும் 2 நெல்லிக்காயை உட்கொண்டால் போதும். நெல்லிக்காய் சாறு குடிப்பதும் நன்மை பயக்கும்.
பூண்டு: பூண்டு நம் இந்திய சமையலில் பரவலாக பயன்படும் உணவுப்பொருளாகும். இது கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. தினமும் 2-3 பூண்டு பற்களை உட்கொள்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது தவிர இதை பல்வேறு உணவுகளில் சேர்த்தும் உட்கொள்ளலாம்.
மஞ்சள்: நாம் உணவின் சுவையை மேம்படுத்த மஞ்சளைப் பயன்படுத்துகிறோம். மஞ்சளில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-செப்டிக் பண்புகள் அதிகம் உள்ளன. மஞ்சள் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது. கொலஸ்ட்ராலை குறைக்க வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் கலந்து குடிக்கவும். சில நாட்களில் வித்தியாசம் தெரியும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.