எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சி... சல்லடையாய் துளைக்கும் சில உணவுகள்
Bone Health: எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, டயட்டில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்ப்பது மிக அவசியம். அதே சமயம், எலும்புகளில் இருந்து கால்ஷியத்தை உறிஞ்சி, சல்லாடையாய் துளைக்கும் உணவுகளை தவிர்ப்பதும் அவசியம். எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் சில உணவுகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
உப்பு: உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். ஆனால், அளவுக்கு அதிகமானால், அதுவே விஷமாகி விடும். உப்பு அதிகம் உட்கொள்வதால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் அபாயம் அதிகரிக்கிறது. உப்பில் உள்ள சோடியம் எலும்பு ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக எலும்புகள் பலவீனமடைகின்றன.
சோடா பானங்கள்: செயற்கை குளிர் பானங்கள் மற்றும் சோடா பானங்களை அதிகமாக உட்கொள்வது எலும்புகளை சல்லடையாய் துளைத்து விடும். சோடா பானங்களில் அதிக அளவு பாஸ்பரஸ் உள்ளது. இது உடல் கால்சியம் சத்தை உறிஞ்சும் ஆற்றலை பாதிக்கிறது. இதனால் எலும்புகளை வலுவாக்கும் கால்சியம் சத்து உடலுக்கு கிடைக்காமல் போகும் நிலை உண்டாகும்.
அதிக சர்க்கரை கொண்ட இனிப்புகள்: அதிக அளவில் சர்க்கரை மற்றும் இனிப்புகளை சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். ஏனெனில் சர்க்கரையை அதிகமாக சாப்பிடும் நிலையில், எலும்புகளில் இருந்து கால்ஷியம் உறிஞ்சப்பட்டு அவை, பலவீனமடைகின்றன. என்வே இனிப்புகளை அளவோடு சாப்பிட வேண்டும்.
காஃபின் நிறைந்த உணவுகள்: தேநீர், காபி மற்றும் சில ஆற்றல் பானங்களில் அதிக அலவில் காஃபின் உள்ளது. அளவிற்கு அதிகமான காஃபின் எலும்புகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உடலின் கால்சியம் உறிஞ்சும் சக்தியை பாதிக்கும் காஃபின் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது எலும்புகளுக்கு இன்னும் தீங்கு விளைவிக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: டிரான்ஸ் கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் எலும்புகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ட்ரான்ஸ் கொழுப்பு பெரும்பாலும் பொரித்த உணவுகள், பர்கர்கள், பீட்சா மற்றும் பிற துரித உணவுகளில் காணப்படுகிறது. அதை முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டால், சிறிய அளவில் உட்கொள்ள வேண்டும்.
மதுபானம்: ஆல்கஹால் கல்லீரலுக்கு மட்டுமல்ல, எலும்புகளுக்கு எதிரி தான். இது உடலில் இருந்து கால்ஷியம் சத்தை உறிஞ்சுவதோடு, உடல் கால்சியம் சத்தை கிரகித்து கொள்வதையும் தடுக்கிறது. இது எலும்பு பலவீனம் மற்றும் எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.