டி20 உலக கோப்பை : வெஸ்ட் இண்டீஸ் அணியை காப்பாற்றிய ஆபத்பாந்தவன் - மிரட்டல் அடி
வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த வெற்றிக்கு மிகமுக்கிய காரணமே ஷெர்பேன் ரூதர்போர்ட் தான். அவர் மட்டும் இக்கட்டான நேரத்தில் அதிரடியான பேட்டிங் ஆடாமல் இருந்திருந்தால் அந்த அணி 70 ரன்களுக்குள்ளாகவே சுருண்டிருக்கும். ஆனால், அதிரடி பேட்டிங் மூலம் அந்த அணியின் ஸ்கோரை சவாலான நிலைக்கு அவர் எடுத்துச் சென்றார். அவருடைய பேட்டிங் தான் போட்டியின் திருப்பு முனையாகவும் அமைந்தது.
டிரினிடாட் பிரையன் லாரா மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து அணி இறங்கியது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியதால் குரூப் 8 சுற்றுக்கு முன்னேற இப்போட்டியின் வெற்றி அந்த அணிக்கு அவசியமாக இருந்தது.
அதனால், சேஸிங் செய்து கொள்ளலாம் என நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் நினைக்க, டாஸ் வெற்றி பெற்று அந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. வில்லியம்சனின் அந்த முடிவு வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் ஆர்டர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறுவதை பார்த்தபோது சரியானதாகவே இருந்தது
ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்களுக்குள்ளாகவே 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதே நிலையில் இருந்திருந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு 70 ரன்களுக்குள்ளாக சுருண்டுவிடும் என எல்லோரும் நினைத்தார்கள். அதனால் எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற மன மகிழ்ச்சியில் நியூசிலாந்து அணி இருந்தது.
அப்போது களமிறங்கிய ஷெர்பேன் ரூதர்போர்ட் நியூசிலாந்து அணியின் பந்துகளை எல்லாம் சிதறடித்தார். எல்லோரும் ஒரு ரன்னுக்கு பந்தை ரொட்டேட் செய்யவே சிரமபட்டபோது, இவர் மட்டும் தனி டிராக்கில் அதிரடியைக் காட்டிக் கொண்டிருந்தார். சொல்லப்போனால் இந்த உலக கோப்பையில் இப்படியான ஒரு இன்னிங்ஸை ஆடிய முதல் பிளேயர் ரூதர்போர்ட் என்று சொல்லலாம்.
அந்தளவுக்கு அடி ஒன்னும் இடியாக அவரது பேட்டில் இருந்து விழுந்தது. 39 பந்துகளில் 68 ரன்கள் விளாசிய அவர், 6 சிக்சர்களையும், இரண்டு பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். இவரது அற்புதமான இன்னிங்ஸால் 20 ஓவர் முழுமையாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது.
இதன்பிறகு ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுக்க 13 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் குரூப் 8 சுற்றுக்கான இடத்தையும் உறுதி செய்தது. நியூசிலாந்து அணியில் பிலிப்ஸ் மட்டும் 40 ரன்கள் எடுத்தார்.
இந்த தோல்வி மூலம் நியூசிலாந்து அணி நடப்பு உலக கோப்பை தொடரில் குரூப் 8 சுற்றுக்கு முன்னேறுவது கூட கேள்விக்குறியாகிவிட்டது. போட்டிக்குப் பிறகுபேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூட, ரூதர்போர்ட் தனி ஒருவராக போட்டியை எங்களிடம் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி பக்கம் எடுத்துச் சென்றுவிட்டார் என அவரை பாராட்டியவாறே புலம்பினார்.