பட்ஜெட்டுக்கு முன் குட் நியூஸ்: PPF, SSY, SCSS... சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு
பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்புத் திட்டம் ஆகிய திட்டங்களில் முதலீடு செய்துள்ளீர்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். மோடி 3.0 அரசாங்கம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் ஜூன் 30 ஆம் தேதிக்குள் நிதி அமைச்சகத்தால் மதிப்பாய்வு செய்யப்படும். முன்னதாக, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், வட்டி விகிதம் முன்னர் இருந்த அளவுகளிலேயே தொடரப்பட்டது. ஆனால் இம்முறை சிறு முதலீட்டாளர்களுக்கு அரசால் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒவ்வொரு காலாண்டு அடிப்படையில் RD, PPF, SSY, MSSC (மகிளா சம்ரித்தி சேமிப்புச் சான்றிதழ்), KVP (கிசான் விகாஸ் பத்ரா), NSC மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் மதிப்பாய்வு செய்கிறது. இந்த முறை பட்ஜெட் ஜூலை 22ம் தேதி தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சகம் வட்டி விகிதத்தை (Interest Rate) உயர்த்தினால், பட்ஜெட்டுக்கு முன் நடுத்தர மக்களுக்கு அது பெரிய பரிசாக அமையும். PPF இன் வட்டி விகிதம் நீண்ட காலமாக ஆண்டுக்கு 7.1 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வட்டி விகித உயர்வு, மக்கள் அதிகம் சேமிக்க ஊக்குவிக்கும் என்று நிதி நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அதிக வட்டி கொடுப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி மாற்றப்படாமல் நிலையானதாக உள்ளது. எனினும், இந்த திட்டங்களுக்கு அதிக வட்டி செலுத்தினால், அதற்கான சுமையை அரசாங்கத்தால் தாங்க முடியுமா என்பதும் ஆய்வு செய்யப்படும். ஆகையால், அரசாங்கம் படிப்படியாக வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023-24 நிதியாண்டின் கடைசி காலாண்டில் இரண்டு திட்டங்களின் வட்டி விகிதங்களில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்தது. அப்போது சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் (SSY) வட்டி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 8.20 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மூன்று வருட FD மீதான வட்டி விகிதத்தை அரசாங்கம் 7.1 சதவீதமாக உயர்த்தியது.
PPF இன் வட்டி விகிதங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக அதே அளவில் உள்ளது. பிபிஎஃப் -இன் வட்டி விகிதம் கடைசியாக ஏப்ரல்-ஜூன் 2020 இல் மாற்றப்பட்டது. கொரோனா தொற்றுநோய்களின் போது, இது 7.9 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அதன் பிறகு அதில் எந்த வித மாற்றமும் இல்லை.
PPF வட்டி விகிதம் - 7.1%, SCSS (மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்) - 8.2%, சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் (SSY) கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டி விகிதம் - 8.2%, தேசிய சேமிப்புச் சான்றிதழில் (NSC) - 7.7%, தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் (POMIS) வட்டி விகிதம் 7.4%.
கிசான் விகாஸ் பத்ராவின் (KVP) வட்டி விகிதம் - 7.5%, 1 ஆண்டு வைப்புத்தொகையின் வட்டி விகிதம் - 6.9%, 2 வருட டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் - 7.0%, 3 ஆண்டு வைப்புத்தொகையின் வட்டி விகிதம் - 7.1%, 5 ஆண்டு வைப்புத்தொகையின் வட்டி விகிதம் - 7.5%, 5 வருட RD க்கு வட்டி விகிதம் 6.7%
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. முதலீடு செய்யும் முன் உங்கள் பொருளாதார ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.