சிறப்பான கடன் திட்டம்... மானியத்தையும் அள்ளிவீசும் தமிழக அரசு - யாருக்கு கிடைக்கும்?
பட்டியல் சமூகத்தினர் (SC), பட்டியல் சமூகத்தினர் (ST) தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க 'அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம்' தமிழ்நாடு அரசால் கடந்தாண்டு கொண்டுவரப்பட்டது.
அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் மூலம் பட்டியலின மக்கள் கடன் பெற்று உற்பத்தி, வியாபாரம், சேவை தொழில் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் அரசு தொழில்முனைவோருக்கு வங்கிகள் மூலம் கடன் பெற்றுத் தரும். 35% மானியமும் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் பயனாளர்களின் வயது உச்ச வரம்பு 55 ஆக உள்ளது. அதே நேரத்தில் இதற்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி ஏதும் தேவையில்லை. இதன்மூலம் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டமும் குறையும். அந்த வகையில், பட்டியலின மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ், நீங்கள் தொடங்கும் தொழிலின் மூலதனத்தில் 35% மானியம் அளிக்கப்படும். இருப்பினும் இந்த மானியம் பெரும் தொகை ரூ.1.5 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதனால், ஒருவரின் தொழில் மூலதனம் ரூ.5 கோடி வரை இருக்கும்.
மாவட்ட தொழில் மையம் மூலம் இந்த மானியம் வழங்கப்படும். இவர்கள் மூலம் கடனமும் வழங்கப்படும். இந்த தொழில் மையம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுகிறது.
புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், ஏற்கெனவே இருக்கும் தொழிலை விரிவுப்படுத்தவும் இந்த திட்டத்தின்கீழ் மானியம் வழங்கப்படும்.
இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கான கடனுக்கான 6% வட்டி மானியம், 10 ஆண்டுகளுக்கு மிகாமல் கடன் காலத்தில் வட்டி மானியம் முன்கூட்டியே வங்கிகளுக்கு வழங்கப்படும். திட்டத்திற்காக அனுமதிக்கப்பட்ட செயல்பாட்டு மூலதனம் 2 ஆண்டுகளுக்கு மிகாமல் வட்டி மானியத்திற்கு தகுதியுடையதாக இருக்கும்.
இந்த திட்டம் குறித்து மேலும் அறிந்துகொள்ள இந்த தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையதளத்தை அணுகவும்.