புத்தாண்டு முதல் இனி இவர்களும் 1000 ரூபாய்... குஷியில் மாணவிகள்!
கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாணவியர்களுக்காக 'புதுமைப்பெண் திட்டம்' முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) வழங்கி வருகிறது.
அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று தற்போது உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதாமாதம் அவர்களின் வங்கிக்கணக்கிற்கே ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
இதேபோன்ற திட்டம் மாணவர்களுக்கும் கொண்டுவரப்பட்டது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் (Tamil Pudhalvan Thittam) கீழ் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கும் மாதாந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.
தொடர்ந்து, புதுமைப்பெண் திட்டம் (Pudhumaipenn Thittam) தற்போது விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதாவது, கூடுதலாக 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இத்திட்டம் மூலம் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், புதிதாக சேர்க்கப்பட உள்ள பயனாளிகள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
தற்போது அரசு பள்ளிகளில் படித்த மாணவியர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இனி அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.
விரிவாக்கம் செய்யப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) நாளை மறுதினம் (டிச. 30) தூத்துக்குடியில் தொடங்க உள்ளார்.
தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து தற்போது உயர்க்கல்வி பயிலும் 75,028 மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மாணவியர் உயர்க்கல்வியில் சேரும் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.