வருமான வரி பிடித்தம் | 60-80 வயது ஓய்வூதியர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
60 முதல் 80 வயது வரை உள்ள தமிழக அரசு மூலம் கருவூலம் சார்ந்து ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது என்ன அறிவிப்பு? எது சம்பந்தமான அறிவிப்பு என்ற விவரங்களை பார்க்கலாம்.
வருமானவரி 2023-24 (AY 2024-25) ஒரு சில கருவூலங்களில் முன்கூட்டிய வரி (Advance Tax) பிடித்தம் செய்ய நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியானது. எனவே வருமான வரி செலுத்துவது தொடர்பாக ஓய்வூதியதாரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது.
தற்போது வருமான வரி பழைய திட்டம் மற்றும் புதிய வருமான வரி திட்டம் என இரண்டு வகைகளில் வருமான வரி திட்டம் அமலில் உள்ளது.
பழைய வருமான வரி திட்டத்தின் கீழே இருக்கக்கூடிய சலுகைகள் குறித்து பார்த்தால், 60 வயதிற்குள் இருப்பவராலுக்கு பழைய வருமான வரி திட்டத்தில் ₹2.5 லட்சம் வரை வரி பிடித்தமில்லை. ₹5 லட்சம் வரையில் 5% வரியும், ₹10 லட்சம் வரையில் 20% வரியும், ₹10 லட்சத்திற்கு மேல் 30% வரியும் விதிக்கப்படும்.
60 முதல் 80 வயதிற்குள் இருப்பவர்களுக்கு பழைய வருமான வரி திட்டத்தின் கீழ் ₹3 லட்சம் வரையில் வருமான வரி இல்லை. ₹5 லட்சம் வரையில் 5% வருமான வரியும், ₹10 லட்சம் வரையில் 20% வருமான வரியும், ₹10 லட்சத்திற்கு மேல் 30% வருமான வரியும் விதிக்கப்படுகிறது.
அதேபோல 80 வயதிற்கு மேல் பழைய வருமான வரி திட்டத்தின் கீழ் ₹5 லட்சம் வரையில் வருமான வரி என்பது இல்லை. ₹10 லட்சம் வரையில் 20% வருமான வரியும், ₹10 லட்சத்திற்கு மேல் 30% வருமான வரியும் விதிக்கப்படுகிறது.
மாத ஓய்வுதியம் ₹46,475 க்கு கீழ் பெறுபவர்களுக்கு டிடிஎஸ் (TDS) பிடித்தம் என்பது கிடையாது. மீறி பிடித்தம் செய்தால் கருவூல அலுவலருக்கு கடிதம் அளிக்க வேண்டும்.
பழைய வருமான வரி திட்டத்தில் இருப்பவர்கள் புதிய வருமான வரி திட்டத்திற்கு மாற விருப்பம் உள்ளவர்கள் மாறலாம். அதற்கு கருவூல அலுவலருக்கு கடிதம் கொடுத்தால் போதுமானது.
புதிய வருமான வரி திட்டத்திற்கு இணைவதற்கு வயது வரம்பு என்பது கிடையாது. அதேநேரத்தில் பழைய வருமான வரி திட்டத்தில் உள்ள சலுகைகள் என்பது இந்த புதிய வருமான வரி திட்டத்திற்கு கிடையாது.
புதிய வருமான வரி திட்டத்தில் ரூபாய் 7 லட்சம் வரை வருமான வரி என்பது கிடையாது. குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பழைய மற்றும் புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் வருமான வரி என்பது கிடையாது மற்றும் டிடிஎஸ் பிடித்தமும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.