வெள்ளி, திங்கட்கிழமைகளில் தேர்தல் நடத்த கூடாது - தமிழிசை சொன்ன காரணத்தை பாருங்க!

Sat, 20 Apr 2024-1:55 pm,

தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட (South Chennai Lok Sabha Constituency) மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் 13வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் மனு அளித்தார். அதன்பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். 

 

தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்றும் திமுக (DMK) தோல்வி பயம் வந்தால் மாற்றுப்பாதையை கடைபிடிப்பர் என்றும் திமுக மீது குற்றஞ்சாட்டினார். மேலும், அவர்"மயிலாப்பூர் தொகுதியில் 13வது வாக்குச்சாவடியில், 122வது வட்டத்தில் நேற்று கள்ள ஓட்டு போட திமுகவினர் முயற்சித்தனர். அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். திமுகவினர் 50 பேர் உள்ளே புகுந்து எங்களது ஏஜெண்ட்களை அடித்து வெளியில் அனுப்பிவிட்டனர்" என்றார்.

 

திமுக மட்டுமின்றி தேர்தல் ஆணையம் மீதும் அவர் புகார் தெரிவித்தார். அதில், "பல இடங்களில் தேர்தல் ஆணையம் குடும்பத்தையே பிரித்துவிட்டது. கணவன் மனைவி பெயர் வேறு வேறு வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றுள்ளது. பலரது பெயர்கள் கொத்துக் கொத்தாக நீக்கப்பட்டுவிட்டது. திமுக இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடக்கூடாது" என்றார்.

மேலும் தேர்தல் ஆணையத்திற்கு (Election Commission Of India) தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை ஒன்றையும் வழங்கினார். "வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் தேர்தல் நடத்தக் கூடாது அப்படி நடத்தும்போது சனி, ஞாயிறுடன் சேர்த்து விடுமுறையாக மக்கள் நினைத்து விடுகின்றனர். தேர்தலை வாரத்தின் நடுவில் புதன்கிழமை, வியாழக்கிழமை போல வைக்க வேண்டும்" என்றார்.

 

மேலும் அவர், "தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்வதை விட , வாக்காளர்கள் அனைவரது பெயரும் பட்டியலில்  இருக்கிறதா என்பதை ஆணையம் கண்காணிக்க வேண்டும். 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற  விளம்பரங்களால் எந்த பயனும் இல்லை. உயிரோடு இருக்கும்போது அவர்களது பெயரை எப்படி நீக்குகிறார்கள். டெண்டர் வாக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்கு போன்ற நடைமுறைகள் குறித்து வாக்காளர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை" என்றார்.

 

திமுக வைத்த குற்றச்சாட்டுக்கு தமிழிசை பதிலளித்தார். அதில்,"நேற்று குறிப்பிட்ட வாக்குச்சாவடியில்  நாங்கள் வாக்காளர்கள் யாரையும் சாதி சார்ந்து பேசவில்லை. திமுக அதுபோல குற்றச்சாட்டை வைப்பது தவறு. வாக்கு சதவீதம் குறைந்தாலும் எங்கள் வாக்குகள் அனைத்தும் எங்களுக்கு பதிவாகி இருக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன். வாக்கு சதவீதம் குறைந்தது கவலை அளிக்கக் கூடியதுதான். வாக்காளர்கள் தங்களுக்கு வாக்குரிமை இருக்கிறதா என்பதை தாங்களே சரிபார்த்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை உரிய பலன் தரவில்லை" என்றார். 

 

மேலும் அதற்கு தீர்வு ஒன்றையும் அவரே வழங்கினார். "அலுவலகம், ரயில் நிலையம், இணையதளம் மூலம் மாதிரி வாக்காளர் பட்டியல்களை மக்கள் சரிபார்த்துகொள்ளும் வகையில் அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். பாஜக (BJP) வாக்காளர்கள் என்று தெரிந்துதான் பலரை நீக்கி உள்ளனர். பூத் ஏஜெண்ட்கள் போதுமான அளவு இல்லாததால்தான் பாஜக வாக்குகள் நீக்கப்பட்டுவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. பூத் ஏஜெண்ட்களுக்கும் இதற்கும்  சம்பந்தம் இல்லை" என்றார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link