மேடையில் அமித்ஷா என்ன சொன்னார்...? சர்ச்சைக்கு பின் வாய் திறந்த தமிழிசை!

Thu, 13 Jun 2024-10:03 pm,

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 293 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். 

 

இருப்பினும், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. குறிப்பாக, நட்சத்திர வேட்பாளர்களாக பார்க்கப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை (கோவை), மத்திய அமைச்சர் எல். முருகன் (நீலகிரி), முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் (தென் சென்னை) உள்ளிட்டோரும் தேர்தலில் படுதோல்வி அடைந்தனர். 

 

பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துவிட்டதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கூறி வருகிறார். இருப்பினும், தமிழக பாஜக முகாமில் தோல்வி குறித்து சிறு புகைச்சல் இருப்பதாகவே கூறப்பட்டு வந்தது. 

 

 

அந்த வகையில் அதிமுகவுடன் கூட்டணியை முறித்ததுதான் பாஜகவின் தோல்விக்கு காரணம் என்ற ரீதியிலும், அதிமுக உடன் கூட்டணி வைத்திருந்தால் பல தொகுதிகளில் பாஜக வென்றிருக்கும் என்ற ரீதியிலும் தமிழிசை சௌந்தரராஜன், பேசியிருந்தார். இது மாநில தலைமைக்கு எதிரான கருத்தாக பார்க்கப்பட்டது. 

சமூக வலைதளங்களில் அண்ணாமலையின் ஆதரவாளர்களும், தமிழிசை சௌந்தரராஜனின் ஆதரவாளர்களுக்கும் மோதிக்கொள்வதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில்தான், ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் விழாவின் மேடையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழிசையை அழைத்து பேசிய காணொலி வைரலானது. 

 

அதாவது, அந்த வீடியோவில் அமித்ஷா தமிழிசையை கண்டிப்பது போன்று இருந்ததாக சமூக வலைதளங்களில் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் அதற்கு அவரது X தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

 

முன்னதாக, நேற்று தமிழகம் திரும்பிய போது விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நிலையில் தற்போது இந்த விளக்கத்தை அளித்துள்ளார். 

 

அவர் அந்த பதிவில்,"நேற்று நான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 2024 மக்களவை தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக ஆந்திராவில்தான் பார்த்தேன். அப்போது அவர் வாக்கெடுப்புக்கு பிந்தைய நிலவரம் மற்றும் எதிர்கொண்ட சவால்கள் பற்றி கேட்க என்னை அழைத்தார். அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை கூறினார். அனைத்து தேவையற்ற யூகங்களையும் தெளிவுபடுத்துவதற்கு இது விளக்கமாகும்" என குறிப்பிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link