அம்மாடி! The Goat பட டிக்கெட்... வெளிநாட்டிலும் அதிக விலைக்கு விற்பனை - எவ்வளவு தெரியுமா?
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் The Greatest Of All Time (தி கோட்) திரைப்படம் நாளை (செப். 5) வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.
தி கோட் திரைப்படம் நாளை ரிலீஸ் என்றாலும் தமிழ்நாட்டில் இன்னும் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கான (The Goat Movie Special Show) அனுமதி தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து உறுதியாகவில்லை. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் காலை 4 மணி சிறப்பு காட்சிகளும், புதுச்சேரியில் காலை 9 மணி சிறப்பு காட்சிகளும் உறுதியாகிவிட்டன.
எனவே, தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிக்கான அனுமதி அரசு தரப்பில் இருந்து இன்று மாலைக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு பொங்கலுக்கு வெளியான துணிவு படத்தின் அதிகாலை 1 சிறப்பு காட்சி கொண்டாட்டத்தின்போது, சென்னையில் ஒரு ரசிகர் உயிரிழந்தார். இதன்பின்னர் பாதுகாப்பு கருதி அதிகாலையில் நடைபெறும் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க மறுத்தது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிகள் காலை 9 மணிக்குதான் திரையிடப்பட்டு வந்தன. ஆனால், தற்போது தி கோட் திரைப்படத்திற்கு அதுவும் இன்னும் உறுதியாகவில்லை. அரசு தரப்பில் அனுமதி அளிக்காதபட்சத்தில் காலை 10.30, 11.30 மணிக்குதான் முதல் காட்சிகள் திரையிடப்படும்.
இருப்பினும், காலை 9 மணிக்கு எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பல திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளின் டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்பனையாகி வருவதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சிறப்பு காட்சி டிக்கெட்டின் விலை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விற்பனையாவதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற நிலை தமிழ்நாட்டில் மட்டுமின்றி பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் இருக்கிறது என சொன்னால் நம்ப முடிகிறதா. ஆம், பாரிஸ் நகரில் உள்ளூர் நேரப்படி நாளை காலை 1 மணியளவில் சிறப்பு காட்சிகள் (The Goat Movie Premiere Show) திரையிடப்பட உள்ளன. அதாவது இந்திய நேரப்படி நாளை காலை 4.30 மணியளவில் திரையிடப்பட உள்ளன. இந்த சிறப்புக் காட்சிக்கான டிக்கெட் விலை 25 யூரோ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் இது 2,321 ஆகும். வழக்கமாக இதுபோன்ற தமிழ் திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு 20 - 23 யூரோவுக்குள்தான் வரும். அதாவது 1,856 ரூபாய் முதல் 2,135 ரூபாய். ஆனால், தி கோட் திரைப்படத்திற்கான சிறப்பு காட்சி டிக்கெட் விலை சுமார் 5 யூரோ வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிறப்பு காட்சியின் டிக்கெட் விலை ஒருபுறம் இருக்க, செப். 6ஆம் தேதிக்கான டிக்கெட் விலையும் அதிகமாகி இருப்பதாக தெரிகிறது. எப்போதும் ஒரு திரைப்படத்தின் இரண்டாம் நாள் காட்சிகள் 15 யூரோ (1,392 ரூபாய்) ஆகதான் இருக்குமாம். அதுவும் நாள்கள் போக போக 13 யூரோ, 12 யூரோ வரை டிக்கெட் விலை செல்லுமாம். ஆனால், தி கோட் படத்திற்கு செப். 6ஆம் தேதிக்கான டிக்கெட் விலை 19 யூரோ (1,763 ரூபாய்) ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம், தி கோட் படத்திற்கான எதிர்பார்ப்பு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.