திருப்பதி லட்டு விவகாரம்: தோஷம் நீங்க... மாலை 6 மணிக்கு இதை செய்யுங்க - தேவஸ்தானம்
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் பிரசாதமாக லட்டு (Tirupati Temple Laddu) வழங்கப்பட்டு வருகிறது. இந்த திருப்பதி லட்டுதான் கடந்த ஒரு வார காலமாக வைரலாகி வருகிறது.
திருப்பதி லட்டுவை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் எச்சங்கள் தெரிந்ததாக ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.
இது கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் (Tirumala Tirupati Devasthanam) கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவையும் அவர் அமைத்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, இன்று திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் சாந்தி யாகம் அர்ச்சகர்களால் நடந்தப்பட்டது.
கலப்பட நெய்யை பயன்படுத்தியதால் ஏற்பட்ட தோஷத்தை நீக்கவும், பக்தர்களின் நலனுக்காகவும் இந்த யாகம் நடத்தப்பட்டதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், திருப்பதி கோயில் லட்டுவில் சேர்க்கப்பட்ட கலப்பட நெய்யால் ஏற்பட்ட தோஷம் நீக்குவதற்காக, இன்று மாலை 6 மணிக்கு பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் பூஜை செய்யும்போது விளக்கேற்றி 'ஓம் நமோ வெங்கடேசாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே நமஹ' என்று மந்திரம் (Kshama Mantra) படிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நீங்கள் மந்திரத்தை உச்சரித்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், கலப்பட நெய் மூலம் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை சாப்பிட்டதால் பக்தர்களுக்கு ஏற்பட்ட தோஷம் விலகும் என்பது நம்பிக்கை என திருமலை திருப்பதி தேவஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.