Vijay Political Party: ‘2026-ன் முதல்வர் விஜய்’ வைரலாகும் ரசிகர்களின் போஸ்டர்!
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை ஆரம்பித்துள்ளார். பல கோடி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய், பல நாட்களாகவே அரசியலுக்கு வருவது குறித்து பரிசீலித்து வந்தார். இந்த நிலையில், அவரது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார்.
மக்கள் பணி செய்வதற்காக அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும், வேறு எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பதாக இல்லை என்றும் விஜய் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தான் பங்குபெற போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தனது அரசியல் கட்சி குறித்து விஜய் வெளியிட்டுள்ள பதிவில், “வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள்,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.
விஜய்யின் இந்த அதிரடி அரசியல் முடிவு அவரது ரசிகர்கள் பலருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. விஜய், தான் நடிக்கும் படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு, பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்திருக்கிறார். இதனால் சிலர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
விஜய் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய்யின் அரசியல் கட்சியை டெல்லியில் பதிவு செய்ய வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
விஜய், அரசியல் கட்சியை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானவுடன் அவரது ரசிகர்கள் அனைவரும் அதை கொண்டாட தயாராகி விட்டனர். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த லட்டுக்கள், கொடிகளை படத்தில் காணலாம்.
விஜய்யின் ரசிகர்கள் அடித்துள்ள ஒரு பேனரில், ‘2026ன் முதல்வர் விஜய்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் இதனை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.