NPS, UPS, OPS: ஓய்வூதிய உத்தரவாதம், அசத்தல் வருமானம்.... யாருக்கு எது சிறந்தது? முழு விவரம் இதோ

Fri, 30 Aug 2024-12:12 pm,

சமீபத்தில் மத்திய அரசாங்கம் இந்தியாவின் ஓய்வூதிய அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை செய்தது. புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அரசு அறிவித்தது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்குப் பிறகான மற்ற சலுகைகளுக்கான உறுதிப்பாட்டை அளிக்கின்றது. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (Old Pension Scheme) பதிலாக கொண்டுவரப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், அரசால் இந்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1, 2025 அன்று அரசாங்கம் UPS ஐ செயல்படுத்தும். புதிதாக செயல்படுத்தப்படும் யுபிஎஸ் மற்றும் மற்றும் முந்தைய ஓய்வூதியத் திட்டங்களில் உள்ள வேறுபாடு என்ன? உங்களுக்கு ஏற்ற திட்டம் எது? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) விட சில வசதிகளையும் சலுகைகளையும் அதிகமாகக் கொண்டுள்ளது. ஏனெனில் இது பணி ஓய்வு பெற்றவர்களுக்கு நிலையான ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. இந்த உறுதிப்பாடு NPS இன் பெரிய குறைபாடாக இருந்தது.

UPS -இல் ஒரு அரசு ஊழியர் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, கடையாக பணி புரிந்த 12 மாதங்களில் பெறப்படும் சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீத தொகை உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியமாக இருக்கும்.

 

உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தைத் தவிர, UPS பணவீக்க இண்டெக்சேஷனையும் வழங்குகிறது. இதில் குறைந்தபட்சம் மாதம் ரூ 10,000 ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கும். இந்த வசதிகள் என்பிஎஸ் இல் இருக்கவில்லை. குடும்ப ஓய்வூதியம் ஓபிஎஸ் (OPS) அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (Old Pension Scheme) ஒரு பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  ஓய்வு பெற்றவர் கடைசியாகப் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். 

UPS -இல் சூப்பர்ஆனுவேஷனில் மொத்த தொகை மற்றும் பணிக்கொடை (Gratuity) ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இது அரசாங்கத்தில் பணியாற்றிய ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மாதாந்திர ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 1/10 என கணக்கிடப்படும்.

NPS இலிருந்து அப்படியே UPS -க்கு கொண்டுவரப்பட்ட ஒரு முக்கிய அம்சம் பங்களிப்பு மற்றும் முழு நிதியுதவி திட்டமாகும். அதாவது உறுப்பினர்கள் தங்கள் ஓய்வூதிய நிதிக்கு பங்களித்து, அதன் மூலம் ஓய்வு பெறும்போது அதிக ஓய்வூதியத்தை உறுதி செய்துகொள்ளலாம்.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS), தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்திலிருந்து (OPS) எவ்வாறு வேறுபட்டுள்ளது என இந்த அட்டாணையில் காணலாம். 

UPS -இன் கீழ், அரசு ஊழியர்கள் குறைந்தபட்சம் 10 வருட சேவையை முடித்த பிறகு ஒரு நிலையான ஓய்வூதியத் தொகைக்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள். மேலும் 25 வருட சேவையை முடித்த பிறகு, சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% தொகையை ஓய்வூதியமாகப் பெற முடியும். 

2004 முதல் NPS இன் கீழ் ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களும் UPS -க்கு தகுதியுடையவர்கள். மேலும், தற்போது NPS இன் கீழ் உள்ளவர்கள் மற்றும் NPS இன் கீழ் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை (VRS) தேர்வு செய்த அனைவருக்கும் அவர்கள் அரசு ஊழியர்களாக இருந்தால் UPS இல் சேருவதற்கான வசதி கிடைக்கும். எனினும், அரசு ஊழியர்கள் NPS -இலேயே தொடர விரும்பினால், அதையும் அவர்கள் செய்யலாம்.

யுபிஎஸ்-இல் சேரும் ஊழியர்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால், சந்தையுடன் இணைக்கப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களில் முதலீடு செய்யப்படுவதால், NPS இன் கீழ் ஓய்வூதியத் தொகையில் மாற்றங்கள் இருக்கும். யுபிஎஸ் ஒரு உறுதியான ஓய்வூதியத்தை அளித்தாலும், சந்தை-இணைக்கப்பட்ட முதலீடுகளில் அதிக வருமானம் இருக்கும் போது, ​​சில சமயங்களில் NPS அதிக ஓய்வூதியத் தொகையை வழங்க முடியும். இருப்பினும் சந்தை வீழ்ச்சியடைந்தால் நிலைமை நேர்மாறாக இருக்கும்.

எந்த ஆபத்தும் இல்லாமல் உத்தரவாதமான ஓய்வூதியத் தொகையை விரும்பும் ஊழியர்களுக்கு UPS மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அதிக வருமானத்தை இலக்காகக் கொண்டவர்களுக்கும், சந்தை அடிப்படையிலான முதலீடுகளைச் செய்து ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கும் NPS மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. NPS அல்லது UPS-இல் முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.  UPS குறித்த  சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link