மனு பாக்கர் ஓகே... யார் அந்த சரப்ஜோத் சிங்? - வெண்கலம் வென்றவரின் வெற்றி கதை!
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான நேற்று (ஜூலை 29) இந்தியாவுக்கு பதக்கம் ஏதும் கிடைக்கவில்லை. துப்பாக்கிச்சுடுதலில் அர்ஜுன் பாபுதா ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 4ஆவது இடத்தை பிடித்து ஜஸ்ட் மிஸில் பதக்கத்தை தவறவிட்டார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) துப்பாக்கிச்சுடுதலில் மனு பாக்கர் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க வேட்டைக்கு தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். இந்தியா இம்முறை பல பதக்கங்களை குவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இரண்டாவது பதக்கத்தை இந்தியா இன்று பெற்றிருக்கிறது.
துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலத்திற்கான கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை, கொரிய இணையை வீழ்த்தி வெண்கலம் வென்றது. இதனால், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற முதல் பெண் மற்றும் 1900ஆம் ஆண்டுக்கு பின் மனு பாக்கரை தவிர யாருமே ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வெல்லவில்லை.
ஹரியானாவைச் சேர்ந்த 22 வயதான மனு பாக்கர் கடந்த 2 நாள்களில் நாடு முழுவதும் உள்ள வீடுகளில் சென்றடைந்திருக்கிறார். இந்த பாராட்டுக்கும், அங்கீகாரத்திற்கும் சொந்தமான மனு பாக்கர் இரண்டாவது முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்ததில், அவருடன் விளையாடிய சரப்ஜோத் சிங்கும் முக்கிய காரணம் ஆவார்.
வெண்கலத்திற்கான இந்த போட்டியில் மனு பாக்கர் சற்று குறைவான பாய்ண்டுகளை எடுக்க, சரப்ஜோத் சிங் சற்று சுதாரித்து விளையாடி வெண்கலத்தை வாங்கித் தந்தார் எனலாம். அந்த வகையில்ஸ, மனு பாக்கர் இரண்டு பதக்கங்களை வெல்வதில் பெரும் உதவியாக இருந்த சரப்ஜோத் சிங் குறித்து இங்கு காணலாம்.
நடப்பு ஒலிம்பிக் தொடரில் முதல் நாளிலேயே 10 மீட்டர் ஏர் ரைபிள் தொடரின் இறுதிப்போட்டிக்கு வராமல், முதல் சுற்றோடு வெளியேறினார். அதில் அவர் 9ஆவது இடத்தை பிடித்திருந்தார். முதல் 8 வீரர்கள் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று நூலிழையில் வாய்ப்பை தவறவிட்டவர் இப்போது பதக்கத்தை வென்றுவிட்டார்.
ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்தின் தீன் என்ற கிராமத்தைச் சேர்ந்த சரப்ஜோத் சிங். ஜத்திந்தர் சிங் - ஹர்தீப் கௌர் இணையின் மகனான இவர் சிறு வயதில் இருந்த துப்பாக்கிச்சுடுதலில் ஆர்வங்கொண்டவர். கால்பந்து மேலும் ஆர்வம் இருந்தாலும் அதைவிட துப்பாக்கிச்சுடுதலில் ஆர்வம் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால், 2014ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சுடுதலில் தனக்கு விருப்பம் இருப்பதாக தனது தந்தையிடம் சென்று கூறியுள்ளார்.
அப்போது அவருக்கு வயது 13 தான். விவசாயியான அவரின் தந்தை துப்பாக்கிச்சுடுதலை கற்பது என்பது செலவு அதிகமாகுமே என்று யோசித்திருக்கிறார். இருந்தாலும் மகனின் கனவை நனைவாக்க அவரை பயிற்சியில் சேர்த்துள்ளார். 2018ஆம் ஆண்டில் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் சரப்ஜோத் சிங் தங்கம் வென்று நம்பிக்கை அளித்துள்ளார். அந்த நம்பிக்கையே தற்போது இந்தியாவுக்கு வெண்கலத்தை பெற்று கொடுத்திருக்கிறது.