ஜம்மு காஷ்மீரின் கத்துவா, உத்தரப்பிரதேசத்தின் உனா பகுதிகளில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி இந்தியா கேட் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் 8 வயது சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதே போல உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் ஆளும் பா.ஜ. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளன. பாலியல் பலாத்கார புகார் கொடுத்த பெண்ணின் தந்தை போலீஸ் கஸ்டடியில் இருந்து மரணமடைந்தார்.


இந்த சம்பவங்களை கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நள்ளிரவு டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.


இந்த பேரணியில் பிரியங்கா வதேரா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தொண்டர்களும் பங்கேற்றனர்.



அப்போது ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என பிரதமர் மோடி கோஷம் எழுப்புகிறார். அது நல்ல கோஷம் தான். வெறும் கோஷம் போட்டால் மட்டும் போதுமா? கீழே இறங்கி வந்து அதை செயல்படுத்தி பெண் குழந்தைகள் வன்முறைக்கு எதிராக சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றார்.


இது அரசியல் பிரச்சினை இல்லை, தேசிய பிரச்சினை. இந்த பேரணியில் பல கட்சியினரை நீங்கள் பார்க்க முடியும். பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை உணரவேண்டும் என்றார்.