சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வெளிமாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் பேசக் கற்றுக்கொண்டு பொதுமக்களிடம் எளிமையாக உரையாடி பணிபுரிந்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சேலம் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அம்மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் ரோகிணி அவர்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். 


அப்போது 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் கோரிக்கை மனுவுடன் அங்கு வந்துள்ளார். பின்னர் அவர் ஆட்சியர் மனுவை ரோகிணியிடம் மனு கொடுக்க சென்றுள்ளார். ஆட்சியரிடம் மனு கொடுப்பதுபோல் அவர் சென்று திடீரென தான் அணிந்திருந்த செருப்பை கழட்டி கலெக்டர் தலை மீது வைக்க முயன்றார். 


இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அவர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சற்று விலகி சென்றார். அப்போது, அந்த நபர் கலெக்டர் அருகே இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரின் தலையில் செருப்பை வைத்ததாக சிலர் கூறுகின்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆவேசம் அடைந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து சரமாரியாக தாக்கினர்.



இதை தொடர்ந்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 


விசாரணை செய்ததில் அவர் கூறியதாவது...! 


தான் செருப்படி சித்தர் என்றும், பொதுமக்களை செருப்பால் அடித்து ஆசீர்வாதம் செய்வேன் என்றும், கலெக்டரை செருப்பால் ஆசீர்வாதம் செய்வதற்காக வந்தேன் என்றும் கூறினார். 


இதையடுத்து போலீசார் அவரை மேலும் விசாரிப்பதற்காக மாநகர காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தொடர்ந்து விசாரணை நடத்திய போது, அந்த நபர் தனது பெயர் ஆறுமுகம் என்றும், ஐ.நா.சபையில் உறுப்பினராக உள்ளதாகவும் தெரிவித்தார்.


இதனால் அவர் உண்மையிலேயே ஐ.நா.சபையில் உறுப்பினராக உள்ளாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா? என மாநகர காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எந்த ஊர்? எதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சேலம் கலெக்டர் தலை மீது செருப்பை வைக்க முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.