#MeToo இது புரியல? வெக்கக்கேடு என சீமானை விமர்சித்த நடிகர் சித்தார்த்
பாடகி சின்மயி விவகாரத்தில் சீமானை குறித்து `இது ஆதிக்க மனோபாவம் நிறைஞ்ச, அவமரியாதை கொண்ட பெண்களை இழிவாக எண்ணும் முட்டாள்தனம்` என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களாக பிரபல பாடகி சின்மயி பிரபலங்கள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்களைக் கொடுத்து வருகிறார். #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. இவர்களில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அந்த வகையில் பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை நேரடியாகவே கூறியிருந்தார். இதனால் தமிழ் திரையுலம் பெரும் அதிர்ச்சி அடைந்திருந்தது. பாடகி சின்மயிக்கு நடிகர், நடிகைகள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சிலர் கருத்து கூற விரும்பவில்லை.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அப்பொழுது வைரமுத்து எனது அடையாளம். அவரை அசிங்கபடுத்தி சிதைக்க நினைத்தால், எந்த விலை கொடுத்தாவது "நான்" அவரை காப்பாற்றுவேன்.
சகோதரி பாடகி சின்மயி அவர்கள், அந்த கால கட்டத்தில் அவர் மீது புகார் கூறியிருக்கலாம், அதைவிட்டு விட்டு 15 வருடம் கழித்து பலி கூறுவது என்னால் ஏற்க்க முடியவில்லை. ஆனால் தற்போது #MeToo ஒன்று இருப்பதனால் தான், அவர் புகார் தெரிவிகிறார். அப்படி ஒன்று இல்லையென்றால், அவர் புகார் தெரிவிச்சிருப்பாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.
சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வைரமுத்து தவறு செய்திருந்தால், அதற்க்கான தண்டனை அவருக்கு வழங்கலாம். அதைச்செய்யாமல் அவரது பெயருக்கு களங்கம் செய்வது தவறு எனக்கூறி வைரமுத்துக்கு ஆதரவா மேலும் சில கருத்துக்கள் கூறியிருந்தார்.
இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சித்தார்த் கூறியது,
சீமான் அவர்கள், "சின்மயி முன்னாடி இத பத்தி பேசிருக்கனும். ஆனால் தன்னோட திருமண நிகழ்ச்சிக்கு வந்த வைரமுத்துக் கூட சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க" என்று சொல்லிருக்காரு.....
அன்புள்ள சீமான்,
தன்னோட சொந்த அப்பா, மாமனார்களால வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் பல வருடமா வேற வழியில்லாம, அவங்க கூட பொது இடங்கள்ல சிரிச்சுட்டு இருந்துருக்காங்க. அதுக்கு பேரு பெண்கள் மீது அதிகாரம் செலுத்துவது. இது புரியல? வெக்கக்கேடு.
மேலும் சீமான் அவர்கள், #Metoo-க்கு பின்னால் பிஜேபி இருக்கு மற்றும் #Metoo ஒரு கண்கட்டு வித்தைனும் கூறியிருக்கிறார். இப்பொழுது தான் எனக்கு புரிகிறது.. நம்ம அரசியல்ல எல்லா பக்கத்துலயும் சிறுபுத்தி உள்ளவங்களும் வெறுப்புணர்வை விதைக்கறவங்களும் இருக்காங்க.
சீமானோட இந்த கருத்துக்கள நான் ரொம்ப வன்மையா கண்டிக்கறேன். இது ஆதிக்க மனோபாவம் நிறைஞ்ச, அவமரியாதை கொண்ட பெண்களை இழிவாக எண்ணும் முட்டாள்தனம்’ என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.