போக்குவரத்து ஸ்டிரைக் குறித்து விரைவில் முடிவு எடுங்கள்: கமல் கோரிக்கை!
போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று முதல்வருக்கு கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த சில தினங்களாக போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், அது போதாது எனக்கூறி தொமுச, சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன. நேற்று இரவு முதல் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ஸ்டிரைக் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளது:- தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.
பொங்கலுக்கு அதுவே அரசுதரும் விலைமதிப்பிலா பரிசாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.