#MeToo லீனாவுக்கு எதிராக ரூ.1 நஷ்டஈடு கேட்டு இயக்குநர் சுசிகணேசன் மனு
இயக்குநர் சுசிகணேசன், தன் மீது குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது ரூ.1 நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
பத்திரிக்கை துறை என்று இல்லை. சினிமா துறை என்று இல்லை. எந்த துறையை எடுத்துக் கொண்டாலும், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் மாற்று கருத்து இல்லை. இதை மாற்றவே பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவை குறித்து #Metoo மூலம் பேசி வருகின்றனர்.
அந்தவகையில் சினிமா துறையில் பணிபிரியும் இயக்குநர் சுசிகணேசன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக லீனா மணிமேகலை குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் இதற்கு திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மறுப்பு தெரிவித்ததோடு, லீனா மணிமேகலை மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால் லீனா மணிமேகலை தரப்பில் இருந்து தொடர்ந்து இயக்குநர் சுசிகணேசன் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று இயக்குநர் சுசிகணேசன், தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது ரூ.1 நஷ்டஈடு கேட்டு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை கவிஞர் லீனா மணிமேகலை எப்படி எதிர்கொள்வார் என்பது பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் வழக்கு விசாரணைக்கு வரும் போது தேவையான ஆதாரங்களை காட்டி இயக்குநர் சுசிகணேசன் மீதான தனது குற்றம்சாட்டை நிருப்பிப்பாரா? எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே செய்தியாளர்கள் சந்திப்பில், எந்தவித தயக்கமும், பயமும் இல்லாமல், தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து விரிவாக பேசினார் கவிஞர் லீனா மணிமேகலை. எனவே தன் மீதான வழக்கையும் எதிர்க்கொள்வார் என்றே தெரிகிறது.
இயக்குனர் சுசிகணேசன் மனைவி மஞ்சரி சுசிகணேசன், தன் கணவருக்கு ஆதரவு கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.