உங்கள் தவறு அல்ல, தீர்ப்பு ஆங்கிலத்தில் இருந்தது: மத்திய அமைச்சர் கிண்டல்!
குல்புஷன் ஜாதவ் வழக்கில் ICJ வழங்கிய தீர்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி என்று அந்நாடு கூறுவதை மத்திய அமைச்சர் கிண்டல் செய்துள்ளார்!
குல்புஷன் ஜாதவ் வழக்கில் ICJ வழங்கிய தீர்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி என்று அந்நாடு கூறுவதை மத்திய அமைச்சர் கிண்டல் செய்துள்ளார்!
தீவிரவாதம் மற்றும் உளவு பார்த்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017, ஏப்ரல் மாதம் மரண தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை (International Court Of Justice) அணுகியது. இந்த வழக்கை விசாரித்த ஐசிஜே மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த சூழலில், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. ஐசிஜே குல்புஷன் ஜாதவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கான இடைக்கால தடை தொடரும் என்றும், மேலும் தண்டைனையை பாகிஸ்தான் மறுபரீசிலனை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு பாகிஸ்தானிற்கு கிடைத்த வெற்றி என்று அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. மேலும் அந்த பதிவில் “ இது பாகிஸ்தானிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. குல்புஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும், அவர் நாடு திரும்புவதற்கு உத்தரவிட என்ற இந்தியாவின் கோரிக்கையை ஐசிஜே நிராகரித்து விட்டது” என்று குறிப்பிட்டுருந்தது. இதேபோல் அந்நாட்டின் ஊடகங்களும் இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்ற ரீதியிலே செய்திகள் வெளியிட்டன.
இந்நிலையில், பீகார் எம்.பியும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் பாகிஸ்தானிற்கு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து; ICJ-ன் தீர்ப்பு ஆங்கிலத்தில் உள்ளதால் தான், பாகிஸ்தான் தாங்கள் வெற்றி பெற்றுள்ளதாக நினைத்து கொண்டுள்ளதாகவும், அது அவர்களின் தவறில்லை என குறிப்பிட்டுள்ளார்.