பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு குறித்து பாஜக MLA தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையினை எழுப்பியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து விலை உயர்வை கண்டு வரும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வினை சமாளிக்க, மக்கள் தங்களது வீட்டு செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என ராஜஸ்தான் மாநில பாஜக அமைச்சர் ராஜ்குமார் ரின்வா பொதுமக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். 


ராஜஸ்தான் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் பாஜக ஆட்சியில் தேவஸ்தான துறை அமைச்சராக இருப்பவர் ராஜ்குமார் ரின்வா. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு குறித்து இவர் தெரிவித்துள்ள கருத்து தற்போது பெரும் சர்ச்சையினை எழுப்பியுள்ளது.



இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது... "பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதால், அவற்றின் விலையும் அதிகரிக்கின்றது என்பதை பொதுமக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இந்த விலை உயர்வினை சமாளிக்க, பொதுமக்கள் தங்களது வீட்டு செலவுகளை குறைத்துக் கொள்ளலாம்.


நாடு முழுவதும் தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, இந்த வெள்ள நிவாரண பணிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இந்த பணிகளை விட்டு அரசு பெட்ரோல் விலையில் கவனம் செலுத்த இயலாது.


பெட்ரோல், டீசல் விலையினை உலக சந்தையில் தீர்மானிக்கப்படுகிறது. அதற்கும், அரசுக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை, எனவே மக்கள் தான் இதனை புரிந்துக்கொண்டு நடந்துக்கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.


இந்த கருத்திற்கு எதிர்கட்சி தலைவர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரது கருத்து ஆணவம் நிறைந்ததாகவும், மனிதத்தன்மை அற்றதாகவும் உள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்!