சர்கார் பட விவகாரம்: நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்!
சர்கார் பட விவகாரம் தொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டரில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சர்கார் பட விவகாரம் தொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டரில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது இத்திரைப்படம். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்து பல தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
இதில், விஜயுடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கள்ள ஓட்டு எதிர்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில், விஜய்க்கு வில்லியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் பெயர் கோமளவல்லியாக அமைக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு சர்சைகள் எழுந்துள்ளன. இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறி அதிமுக கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தின் போஸ்டர்கள், கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களை கிழித்தும், படத்தை திரையிட விடாமல் தடுத்தும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்கார் பட விவகாரம் தொடர்பாக, ரஜினிகாந்த் தனது டிவிட்டரில், ‘தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்’
என பதிவிட்டுள்ளார்.