அமேஸான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் போன்ற, ஆன்லைன் வீடியோ விநியோக நிறுவனங்களுக்கு, விதிமுறைகள் விதிக்க கோரிய மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமேஸான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் உட்பட பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள், 'வெப் சீரீஸ்' எனப்படும், இணைய தொடர்களை தயாரித்து, ஒளிபரப்பி வருகின்றன. இந்த இணைய தொடர்களை லட்சக்கண மக்கள் சந்தா செலுத்தி, ஆன்லைன் வாயிலாக கண்டு வருகின்றனர். 
ஆனால் திரைப்படங்களை போல் இந்த இணைய தொடர்கள் தயாரிக்கப்படும் போது மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறையின் கீழ், தணிக்கை செய்யப்படு வதில்லை. இதனால் அரசு கட்டுப்பாடு இன்றி, இந்த நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், கடந்த ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில், தொண்டு நிறுவனம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அமேஸான், நெட்பிளிக்ஸ் போன்ற இணைய வீடியோ தயாரிப்பு நிறுவனங்களுக்கு, எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாததால், அவர்கள் தயாரிக்கும் தொடர்களில், ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள், அதிக அளவில் இடம் பெறுகின்றன.  


பெண்களை இழிவு படுத்தும் விதமாக ஆபாச வார்த்தைகள், மிக சரளமாக பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இந்த நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.


இந்த வழக்கு விசாரணையின் போது, ஆன்லைன் நிறுவன நிகழ்ச்சிகளுக்கு, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை என, மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 


இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அமேஸான், நெட்பிளிக்ஸ் போன்ற ஆன்லைன் வீடியோ' தயாரிப்பு நிறுவனங்களுக்கு விதிமுறைகள் விதிப்பது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.