Watch: Warner முதல் சின்னப்பம்பட்டி வரை, வாழ்த்து மழையில் நனையும் T Natarajan
தனது சொந்த ஊரிலும் நடராஜனுக்கு அன்பான, ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள சினப்பம்பட்டி கிராமத்தின் சாலைகளில் அவரை வரவேற்க வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
சென்னை: ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி இந்தியா திரும்பியுள்ளது. இந்திய அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரும் வியாழக்கிழமை காலை சென்னைக்கு வந்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணியை வெல்வது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாகும்.
அதுவும் ஆஸ்திரேலியாவை (Australia) வென்ற இந்திய அணி ஒரு அனுபவமற்ற அணியாக இருந்தது. பல மூத்த வீர்ரகள் ஆடாத நிலையில், சர்வதேச போட்டிகளுக்குள் சமீபத்தில்தான் கால் எடுத்து வைத்திருக்கும் வீரர்களே பலர் இந்த அணியில் இருந்தனர். எனினும், பல திறமைகளை இந்த தொடர் வெளிக்கொண்டு வந்துள்ளது.
அதில் மிக முக்கியமாக பேசப்படுபவர் டி. நடராஜன் (T Natarajan). இவர் ஆஸ்திரேலிய தொடரில் மூன்று வகையான போட்டிகளிலும் அறிமுகமாகி தனக்கென தனி முத்திரை பதித்தார்.
இந்தியர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் நடராஜனை புகழ்ந்த வண்ணம் உள்ளனர். IPL அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாதில் (SRH) நடராஜனின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னரும் நடராஜனை புகழ மறக்கவில்லை. அவர் நடராஜனை புகழ்ந்து, ‘நட்டு… வாழ்த்துக்கள்!!’ என கூறிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
தனது சொந்த ஊரிலும் நடராஜனுக்கு அன்பான, ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள சினப்பம்பட்டி கிராமத்தின் சாலைகளில் அவரை வரவேற்க வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் நடராஜன் வந்தார். மேள தாளத்துடனும், பலவித பாரம்பரிய நடனங்களுடனும், பட்டாசுகளுடனும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இருபத்தி ஒன்பது வயதான நடராஜன், ஆஸ்திரேலியாவில் இந்திய அணி (Team India) பெற்ற அபார வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். தேரில் அமர்ந்தபடி அவர் தன் வீடு வந்து சேர்ந்தார்.
நடராஜன் ஆரம்பத்தில் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும், சில முக்கிய வீரர்கள் காயமடைந்ததால், அவருக்கு அணியில் இடம் கிடைத்தது. ஆனால், கிடைத்த வாய்ப்பை மிகவும் நன்றாக பயன்படுத்திக்கொண்ட நடராஜன், தனது முதல் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அருமையான யார்கர்களை போடும் நடராஜன் ‘யார்க்கர் கிங்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
டி நடராஜன் தனது அற்புதமான ஆட்டத்தால் கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இந்த நிலையை அடைய அவர் வாழ்க்கையில் அதிக சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். நடராஜன் IPL-ல் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களிலும் அற்புதமாக பந்து வீசினார். இதன் விளைவாக அவருக்கு டெஸ்ட் போட்டிகளிலும் இடம் கிடைத்தது.
ALSO READ: T.Natarajan: சின்னப்பம்பட்டியில் இருந்து சிட்னிக்கு பயணம் in pics
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR