நடிகர் கமல்ஹாசனின் கனவு திரைப்படமான “தலைவன் இருக்கிறான்” திரைப்படத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் கமல்ஹாசன். தமிழ் சினிமா துறையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு, உலக தரம் பெற்று தந்தவர். 


சில சமையங்களில் இவரது முயற்சிகள், சர்ச்சைக்கு உள்ளாகி விடும். அப்படியாக இவர் இயக்கி நடித்த தேவர் மகன், விருமாண்டி, விஸ்வரூபம் போன்ற படங்கள் பல பிரச்சினைகளை சந்தித்தன. அந்த வழியில் இவரது மற்றொரு கனவு படமான “மருதநாயகம்” படப்பிடிப்பு ஆரம்பித்து பாதியில் சில பிரச்சினைகளால் நின்று போனது.


அதேப்போல இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய “தலைவன் இருக்கிறான்” என்ற அரசியல் படத்தில் இயக்கி நடிக்க விரும்பினார். அப்போதும் அந்த படப்பிடிப்புக்கு பல வகைகளில் தடைகள் எழுந்தது. இறுதியாக அந்த முயற்சியை கைவிட்டு “உன்னை போல் ஒருவன்” திரைப்படத்தை எடுத்தார். இது இந்தியில் நஸ்ருதீன் ஷா நடித்து வெளியான “வெட்னஸ்டே” படத்தின் ரீமேக் ஆகும்.


பின்னர் அரசியல் செயல்பாடுகளில் ஆர்வமாக களமிறங்கிய கமல் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். அதன்படி சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் இவர் நடிப்பதாக இருந்த “இந்தியன் 2” திரைப்படமும் சில பல காரணங்களால் படபிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 10 வருடம் கழித்து மீண்டும் “தலைவன் இருக்கிறான்” திரைப்படத்தை கமல் கையில் எடுத்துதள்ளார்.


சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானோடு கமல் அமர்ந்திருக்கும் அதிகாரப்பூர்வமான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக தெரிகிறது. 



ஏற்கனவே கமலின் தெனாலி, இந்தியன் போன்ற படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானோடு கமல் அமர்ந்திருக்கும் இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கமல்ஹாசன், அணியில் இணைந்து பலப்படுத்தியதற்கு நன்றி, சில படைப்புகள் வளர்ச்சியடைய உகந்தவை, தலைவர் இருக்கிறான் அந்த வகையில் ஒன்று என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்த அறிவிப்பு தலைவர் இருக்கிறான் திரைப்படம் மீண்டும் துவங்கிருப்பது உறுதியாகியுள்ளது.