Aaddi Amavasai: ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசை ஆகும். ஜோதிட சாஸ்திர கணக்கின்படி கடக ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை. ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களும் ஒரு நேர் கோட்டில் வருகின்றன. ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தர்ப்பணம் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் இழந்து காணப்பட்டால் அவர்களின் நல்வாழ்க்கைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் சரியான பரிகாரமாக இருக்கும். அமாவாசை தினம் பிதுர் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கின்றது என்பது ஐதீகம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பௌர்ணமிக்குப் பிறகு வரும் 15 நாட்களில் சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் மறுபடியும் ஈர்த்துக்கொள்கின்றனர். அதனால் தேய்ந்து ஒளியிழந்த சந்திரன் "அமை" என்ற ஒற்றைக் கிரணத்தில் வாசம் செய்வதால், அந்த நாள் அமாவாசை என வழங்கப்படுகிறது.


அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய வழிபாட்டினைப் பற்றி முதன் முதலில் பராசர முனிவர், மைத்ரேய மகரிஷிக்கு விளக்கிச் சொன்னதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஒரு சமயம் கவுசிக முனிவர் மற்ற ரிஷிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது, இப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின்மூன்று புனித கங்கைகளில் நீராட முடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும் என்று ரிஷிகள் கூறினார்கள்.


மேலும் படிக்க | சௌபாக்கியத்தை அருளும் ‘சுக்ரன்’ கிரகம் வலுவாக இருக்க சில பரிகாரங்கள்


ஆனால் கவுசிக முனிவர், "என்னால் பதின்மூன்று கங்கைகளில் நீராட முடியும்" என்று கூறி, ரிஷிகளின் கூற்றினைப் பொய்யாக்கும் விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தவம் புரிந்தார். பல வருடங்கள் தவம் புரிந்தும் இறைவன் காட்சி தரவில்லை.


இறுதியில் திருப்பூந்துருத்தி என்னும் திருத்தலத்திற்கு வந்து பல வருடங்கள் தவம் மேற்கொண்டார். கவுசிக முனிவரின் உறுதியான தவத்தினைப் போற்றிய இறைவன் ஓர் ஆடி அமாவாசை நாளில் அன்னை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகக் காட்சி தந்தருளினார்.


முனிவரின் வேண்டுகோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும் கங்கைகளும் அங்கு ஒரே சமயத்தில் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன. உடனே கவுசிக முனிவர், பதின்மூன்று கங்கைகளின் தீர்த்தத்தையும் எடுத்து சிவனுக்கும் உமைக்கும் அபிஷேகம் செய்து தானும் நீராடி இறைவனுடன் கலந்தார்.


ஆடி அமாவாசையில் இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்தப் புனித நாளில் திருப்பூந்துருத்தி தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.


மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, நிம்மதியான வாழ்வைத் தரும் பிரதோஷ வழிபாடு


சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை. இன்று நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.


அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன. அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன. அதிலும், ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. 


எனவே, அன்று புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். மேலும் நம்முடன் வாழ்ந்த, காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. 


மேலும் படிக்க | முக்கண்ணனுக்கு ஆடி மாத காவடி: இது சிவனுக்கான காவடியாட்டம்


ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது முன்னோர்களின் ஆசி என்ற வரத்தைப் பெற்றுத் தரும். 


ஆடி அமாவாசையில் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் சிறப்பான கடல் நீராடல் நடக்கிறது. அக்னி தேவனே, இங்கு வந்து நீராடிய தினம் என்பது நம்பிக்கை. ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்டபோது, சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய அடுத்தநொடியே அக்னி தேவன் அலறினான். சீதாதேவியின் கற்புக்கனல் அவனை சுட்டெரித்தது. சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து தன் சூட்டைத் தணித்துக்கொண்டான். அதனால் கடல் நீர் சூடேறியது. எனவே அக்னி தீர்த்தம் எனப் பெயர் வந்தது.


அதையடுத்து "அக்னி நீராடிய கடலில் நீராடுவோரின் பாவங்கள் தீரும்' என ஆசியளித்தாள் சீதாதேவி. இன்றும் ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன்னுள்ள கடல் நீரில் அலையே இருக்காது. சீதாதேவிபோல அமைதியான இக்கடலில் நீராடுவது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசை நாளன்று இங்கு நீராடுவதும் நீத்தார் கடன்களைச் செய்வதும் விசேஷமானது. 


மேலும் படிக்க | மூன்று ராசிகளுக்கு அடிக்குது ஜாக்பாட்! கவலை வேண்டாம் கன்னி ராசிக்காரரே


முன்னோர் வழிபாட்டை ஆடி அமாவாசையன்று காலையே துவங்கிவிட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தக்கரைக்குச் சென்று தர்ப்பணம் செய்துவரவேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு திருவிளக்கேற்ற வேண்டும். 


ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பிச் சாப்பிட்ட உணவு வகைகளைப் படைக்கவேண்டும். படங்களுக்கு தீபாராதனை செய்தபிறகு, காகத்திற்கு உணவிடவேண்டும். இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிடவேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்தால் முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசீர்வாதம் செய்வதாக ஐதீகம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜூன் 14 முதல் ஜொலிக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ