நாளை தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா... நிகழ்வுகள் முதல் பாதுகாப்புவரை முழு விவரம்
கந்த சஷ்டி திருவிழா நாளை திருச்செந்தூரில் தொடங்குகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகும். இங்கு நடக்கும் கந்த சஷ்டி திருவிழா வெகு பிரபலம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த விழா நடந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்திருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா நாளை (அக்டோபர் 25) தொடங்கவிருக்கிறது. நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், இரண்டு மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது.
இதனையடுத்து அதிகாலை 5.30 மணிக்கு ஜெயந்திநாதர், யாகசாலைக்கு புறப்படுகிறார். தொடர்ந்து கந்த சஷ்டி திருவிழாவானது காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்கவுள்ளது. அதன் பிறகு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி - தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.
பின்பு மூலவருக்கு காட்டப்படும் சாயரட்சை தீபாராதனையை அடுத்து சுவாமி-அம்பாள்கள் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். கந்த சஷ்டி திருவிழா முதல் நாளன்று சூரிய கிரகணம் நடப்பதால் மாலை 4 மணிக்கு பட்டு சாத்தி, கோயில் நடை சாத்தப்படுகிறது.
பின் மீண்டும் மாலை 6.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் நடக்கின்றன. மகா தீபாராதனையின் இரண்டாம் நாளான 26ஆம் தேதி (புதன்கிழமை) முதல் ஐந்தாம் நாளான 29ஆம் தேதிவரை (சனிக்கிழமை) தினமும் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடக்கின்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ஆறாம் நாளான 30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. 31ஆம் தேதி (திங்கட்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கு வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடக்கின்றது.
இந்தத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பெரிய திரைகள் மூலம் யாக சாலை பூஜை, சூரசம்ஹாரம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்பும் செய்யப்படுகின்றன.
மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் சனி; வாழ்க்கையில் குழப்பத்தை சந்திக்கும் ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ