முருகப்பெருமான் நிலத்தில் போரிட்டு அசுரர்களின் கர்வத்தை அடக்கியது திருப்பரங்குன்றத்தில் என்றால், கடலில் போரிட்டு அசுரர்களின் ஆணவத்தை அழித்த இடம் திருச்செந்தூர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள ஒரே கோயில் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்வதற்காக சென்றபோது சேனாதிபதி முருகனின் சேனைகள் தங்கியிருந்த இடமே தற்போது திருச்செந்தூர் ஆலயம் இருக்கும் இடம் ஆகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போர்க்கடவுள் முருகனின் ஒன்பது படைத் தளபதிகளில் மூத்தவரான வீரபாகுவின் பெயரில் திருச்செந்தூர் வீரபாகு க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. திருச்செந்தூரில், படைத்தளபதி வீரபாகுவிற்கு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகே மூலவர் செந்திலாண்டவருக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. அசுரர்களை அழிப்பதற்காகவே முருக அவதாரம் நிகழ்ந்தது என்பதால், அவரின் அவதார நோக்கம் நிறைவேறியதால் திருச்செந்தூர் சிறப்பும், தனித்துவமும் வாய்ந்ததாகும்.


சேவல் கொடியுடனும், பார்வதி தேவி கொடுத்த சக்திவேலுடன் வேலவனாகவும், சூரபத்ரனை கொன்று வெற்றிக்கொடியை ஏந்தியவாறு செந்தில் ஆண்டவர் மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். 


வைகாசி விசாக தினத்தில் திருச்செந்தூர் சுப்ரமண்ய திருக்கோயிலில், கருவறையில் தண்ணீர் நிற்கும் படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உற்சவம் நடத்தப்படுகிறது. வைகாசி மாதத்தில் தகிக்கும் அனல் வெப்பத்தை தணித்து முருகனை குளிர்வித்தால் நல்லது என்பது நம்பிக்கை ஆகும்.


மேலும் படிக்க | ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோ


திருச்செந்தூரில் இரண்டு மூலவர்கள் உண்டு. பாலசுப்ரமணிய சுவாமி, சண்முகர் என்ற இரு மூலவர்களுடன், சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர் அளவாய்பெருமான் என்ற நான்கு உத்சவ மூர்த்திகளும் உள்ளனர். திருச்செந்தூர் கோயில் கருவறை உட்பகுதியில் சூரிய லிங்கம், சந்திர லிங்கம் என்று இரண்டு லிங்கங்கள் உள்ளன. மகா மண்டபத்தில் உள்ள சண்முகர் மண்டபத்தில் ஆத்ம லிங்கம் உள்ளது. திருச்செந்தூர் முருகன் இருக்கும் இடம், ‘மணியடி’ என்று சொல்லப்படுகிறது. இங்கு நின்று முருகனை தரிசிப்பது சிறந்தது.


திருசெந்தூரில் மூலவருக்குப் பின்புறம் சுரங்க அறை உள்ளது. இங்கே முருகன் பூஜித்த பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறை பாம்பறை என அழைக்கப்படுகிறது. மூலவருக்கு மேல் ஒரு வெள்ளி பாத்திரத்தில் பால் நிரப்பி அதில் துவாரம் அமைத்து பாலை மூலவர் மீது விழச்செய்து சுமார் 3 மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.


உலோகத் திருமேனி கொண்ட திருச்செந்தூர் செந்தில் ஆண்டவருக்கு ஆண்டுக்கு 36 முறையே அபிஷேகம் நடைபெறுகிறது. 
மூலவர் பாலசுப்ரமணிய சுவாமி யோக நிஷ்டையில் உள்ளவர் என்பதால், அவருக்கு செய்யப்படும் நெய் வைத்தியத்தில் காரம், புளி சேர்க்கப்படுவதில்லை என்றாலும், மற்றொரு மூலவரான சண்முகருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி சேர்ப்பார்கள். 
தினமும் ஒன்பதுகால பூஜை நடைபெறுகிறது.


செந்தில் ஆண்டவர் கோயில், பிரணவத்தை அடிப்படையாக கொண்டு வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. கோயில் வடக்கு தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு மேற்காக 214 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. கோபுரம் யாழி மண்டபத்தின் மேல் 137 அடி உயரமும் 90 அடி நீளமும் 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. திருச்செந்தூரில் பன்னீர் இலை விபூதி பிரசாதம் தான். திருச்செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங்களாக இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு பன்னீர் இலைகளில் விபூதி வைத்து தான் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கடகத்திற்கு மாறும் புதன்! கும்பத்தில் வக்ரமாகும் சனி! கதிகலங்கும் 4 ராசிகள் உஷார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ