புத்ரதோஷத்தால் சோகமா? புத்ர சோகத்திற்கு பரிகாரங்கள்! வழிபட வேண்டிய தெய்வங்கள்
Puthra Dosham And Puthrasogam : புத்திர தோஷம், புத்திர சோகம் ஆகிய வார்த்தைகளை அடிக்கடி கேட்டிருக்கலாம். உண்மையில் புத்திர சோகம், தோஷம் ஆகியவை என்ன? அதற்கு பரிகாரம் இருக்கிறதா? தெரிந்துக் கொள்வோம்...
ஒருவரின் வாழ்க்கையில் குழந்தைகள் இருந்தால் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்க்கை கழியும் என்பதால் தான், திருமணம் ஆனதுமே குழந்தை பிறப்பு பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரிக்கின்றன. ஆனால், திருமணமானவர்களுக்கு குழந்தை பிறக்காவிட்டால் கவலை அதிகரிக்கிறது. மருத்துவர்களை நாடுவது மட்டுமல்ல, ஜோதிடர்களையும் குழந்தை பிறப்புக்காக சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் இருக்கிறது. அப்போது, குழந்தை பாக்கியம் இல்லை, புத்திர தோஷம், புத்திர சோகம் என பல வார்த்தைகளை கேட்க வேண்டியிருக்கும்.
புத்திர தோஷம் என்றால் என்ன?
புத்திர தோஷம் என்பதற்கான சரியான வரையறையை அப்படியே சொல்லிவிட முடியாது என்றாலும், குழந்தை பிறக்காதது மட்டுமல்ல, குழந்தைகள் பிறந்தாலும் புத்திர தோஷம் உண்டு என்பது பலருக்கு தெரியாத உண்மை. புத்திர தோஷன் என்பது பலவகைப்படும். பொதுவாக அதனை ஒன்பது வகையாக பிரிக்கலாம்.
1. திருமணமாகியும் குழந்தை பிறக்காமல் இருப்பது
2. ஆண் குழந்தை பிறக்காதது
3. குழந்தை பிறந்தாலும் அவற்றால் பெற்றோருக்கு கவலையே ஏற்படுவது (உதாரணமாக பிறக்கும் குழந்தை மாற்றுத் திறனாளியாக இருப்பது)
4. குழந்தைகள் பெற்றோரை பிரிந்து வாழும் நிலை
5. குழந்தைகளுக்கு இளமையிலேயே நோய் ஏற்படுவது
6. பெற்ற பிள்ளைகள் பெற்றோரை அலட்சியப்படுத்துவது
7. பிள்ளைகள், பெற்றவர்களை காப்பாற்றாமல் தவிக்க விடுபவர்களாக இருப்பது
8. குழந்தைகளின் திடீர் மரணம்
9. குழந்தைகள் விபத்தில் அகால மரணமடைவது
மேலும் படிக்க | ஆடியில் தானம் செய்தால் எதிர்காலம் வளமாகும்! ஆடி மாத சிறப்பு வழிபாடுகள்...
புத்திர சோகம் என்றால் என்ன?
குழந்தை வளரும்போது, அந்தக் குழந்தையால் பெற்றவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் கவலை ஏற்படும் நிலையை புத்திர சோகம் என்று சொல்லலாம். அதாவது, வாழ்க்கையில் குழந்தைகளால் கஷ்டப்படும் அமைப்பு ஏற்பட்டால், அவர்களின் ஜாதகத்தில் புத்திர சோகம் என்ற அமைப்பு இருக்கும்.
புத்திர தோஷ ஜாதக அமைப்பு
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தின் ஐந்தாம் இடத்தில் ராகு இருந்தால், அவருக்கு புத்திர தோஷம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இது 100 சதவிகிதம் உண்மையானது அல்ல. ஏனென்றால், ஜோதிடத்தில் ஒரு கிரகம் நிற்கும் இடத்தை வைத்து மட்டுமே எந்த பலனும் சொல்லமுடியாது.
பொதுவாக, ஒரு ஜாதகத்தை கணிக்கும்போது, புத்திரகாரகன், புத்திரஸ்தானாதிபதி, புத்திரஸ்தானத்தை பார்த்த கிரகங்கள், புத்திர ஸ்தானத்தில் இருக்கும் கோள்கள், அவர்கள் நின்ற சாராதிபதிகள் என பல விஷயங்களை ஆராய்ந்த பிறகுதான் பலன் சொல்ல வேண்டும்.
பொதுவாக, ஜாதகத்தில் லக்னத்துக்கு 5-ம் இடம் என்று சொல்லப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானமே புத்திர ஸ்தானம் என அழைக்கப்படுகிறது. 5-ம் இடம் நமது முன் ஜென்மத்தின் புண்ணிய பாவங்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஐந்தாம் பாவாதிபதி, குருவுடன் பகையாகவோ அல்லது நீசம்பெற்றும், ராகுவோடு தொடர்பு கொண்டிருந்தாலும் அந்த அமைப்பை புத்திர தோஷம் உள்ளது என்று சொல்லலாம்.
புத்திரதோஷம் ஏற்பட காரணம் என்ன?
புத்திரதோஷம் என்பது யாருக்கு ஏற்படும், இந்த தோஷம் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம். முன்னோர்களுக்கு முறையாக ஈமக் கடன் செய்யாததாலும், பெற்ற தந்தையின் சாபத்தைப் பெற்றாலும், முன்னோர்களின் சாபத்தினாலும் புத்திர தோஷம் ஏற்படுகிறது.
அதிலும், சந்திரனால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், அதற்கு பெண்கள் கொடுத்த சாபம் காரணம் என்றும், பெற்றா தாயை சரியாக கவனிக்காததாலும் புத்ர தோஷம் ஏற்படுகிறது என்று புராணங்களும், ஜோதிட நூல்களும் சொல்கின்றன.
புத்ர தோஷம் நீங்க பரிகாரம்
புத்திர தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் இருந்தாலும், அது அவர்களின் கர்மவினைகள் என்பதால், என்ன தவறு செய்தோம் என்றே தெரியாத நிலையில் அதை நிவர்த்தி செய்ய இயலாது. வினைக்கான பலனை அனுபவித்து தான் தீர வேண்டும் என்றாலும், அறியாத தவறால் துன்பப்படுகிறவர்கள், பிறருக்கு உதவி செய்வதன் மூலம் பரிகாரம் செய்துக் கொள்ளலாம்.
குலதெய்வ வழிபாடு
நம்மிடம் இருப்பதை, தேவைப்படுபவர்களுக்கு, எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் கொடுத்து உதவுவது முக்கியமான பரிகாரம் ஆகும். அதிலும், குல தெய்வக் கோவிலுக்கு அடிக்கடி சென்று அங்கு அன்னதானம் செய்வது தோஷத்தை நிவர்த்தி செய்யும்.
விநாயகர் முருகர் சமேத சிவ பார்வதியை வணங்குவது நன்மை தரும். நவகிரகங்களுக்கு தலைவரான சிவனை வணங்குவது புத்ர தோஷத்தைப் போக்கும். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
மேலும் படிக்க | வக்ர பெயர்ச்சி என்ற ஒன்றே ஜோதிடத்தில் கிடையாது! திடுக்கிட வைக்கும் ஜோதிட உண்மைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ