சச்சின், கோலியின் பல ஆண்டு கால சாதனையை தகர்த்த ஆப்கான் வீரர்!
AFG vs BAN: சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியின் பல ஆண்டுகால இந்த ஒருநாள் போட்டி சாதனைகளை ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் முறியடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது எட்டாவது சதத்தை விளாசினார். UAEல் உள்ள ஷார்ஜாவில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று இந்த ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது ஆப்கானிஸ்தான். இந்த போட்டியில் சதம் அடித்த 22 வயதான ரஹ்மானுல்லா குர்பாஸ், இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரின் ஒருநாள் பேட்டிங் சாதனையை தகர்த்துள்ளார். மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பேட்டிங் செய்தது.
மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் மஹ்முதுல்லாஹ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பங்களாதேஷ் அணி 50 ஓவரில் 244 ரன்கள் குவித்தது. தொடரையும் இந்த போட்டியையும் வெல்ல 245 ரன்களை துரத்தியது ஆப்கானிஸ்தான் அணி. ஒருபுறம் ரஹ்மானுல்லா குர்பாஸ் சிறப்பாக விளையாட, மறுபுறம் ஆப்கான் அணி விக்கெட்களை இழந்தது. 20.1 ஓவரில் 81 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. இப்படி இக்கட்டான நிலையில் இருந்தாலும், ஆப்கானிஸ்தான் அணி 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் போட்டியில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி குர்பாஸ் 120 பந்தில் 101 ரன்கள் அடித்து ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். கிட்டத்தட்ட 7 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் அதிரடி காட்டினார். மறுபுறம் அஸ்மத்துல்லா உமர்சாய் 70 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.
இந்த சதத்தின் மூலம் குறைந்த வயதில் (22 ஆண்டுகள் மற்றும் 349 நாட்களில்) ஒருநாள் போட்டிகளில் 8வது சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் (22 ஆண்டுகள் மற்றும் 312 நாட்கள்) முதல் இடத்தில் உள்ளார். மேலும் சச்சின் (22 ஆண்டுகள் 357 நாட்கள்), கோலி (23 ஆண்டுகள் 27 நாட்கள்) மற்றும் பாபர் அசாம் (23 ஆண்டுகள் 280 நாட்கள்) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி உள்ளார் ரஹ்மானுல்லா குர்பாஸ். பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடர் வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் தொடரை கைப்பற்றி உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் வென்றது. மேலும் அயர்லாந்தை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது பங்களாதேஷ் அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் மற்ற அணிகளுக்கு கடும் போட்டி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பெர்த் டெஸ்டில் ரோஹித் சர்மா இல்லை! இவர் தான் கேப்டன்! கம்பீர் அதிரடி முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ