ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இது அவரது சிறந்த ஓட்ட நேரமாகும். தங்கப்பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும். 


திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி, தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.



ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர் பால்சிங் 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கம் வென்றார். அத்துடன் அவர் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலக தடகள போட்டிக்கு தகுதி பெற்றார். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஜபிர் மதாரியும், பெண்கள் பிரிவில் சரிதா பென்னும் வெண்கலப்பதக்கம் பெற்றனர். இதன் மூலம் இந்தியா இந்த போட்டியில் மொத்தம் 2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் வென்றுள்ளது.