ஆஸ்திரேலிய ஓபன்: போராடி வெற்றி பெற்ற பெடரர்; செரீனா அவுட்
ஆஸ்திரேலிய ஓபனில் டென்னிஸ் போட்டியில் இருந்து வெளியேறிய செரீனா வில்லியம்ஸ். ரோஜர் பெடரர் மற்றும் கோகோ கோவ் அடுத்து சுற்றுக்கு முன்னேற்றம்.
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபனில் சீனாவின் வாங் கியாங்கிடம் தோல்வியடைந்ததன் மூலம் மூத்த அமெரிக்க வீரர் செரீனா வில்லியம்ஸ் போட்டியில் இருந்து வெளியேறினார், அதேநேரத்தில் 15 வயது இளைஞரான கோகோ கோவ் நடப்பு சாம்பியனான நவோமி ஒசாகாவை தோற்கடித்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில், மூத்த வீரர் ரோஜர் பெடரர் மிகவும் போராடி வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அதே நேரத்தில் நோவக் ஜோகோவிச் அலட்டிக்கொள்ளாமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
செரீனா தனது 24 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்காக இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கும். மூன்றாவது சுற்றில் 27-ம் நிலை வீராங்கனை கியாங்கிடம் 6-4, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். ஆஸ்திரேலிய ஓபனில் செரீனா ஏழு முறை பட்டத்தை வென்றுள்ளார். 2006 இல் மூன்றாவது சுற்றில் வெளியேறிய அவர், முதல் முறையாக இந்தமுறை இவ்வளவு விரைவாக வெளியேறினார். ஆஸ்திரேலிய ஓபனில் முதன்முறையாக விளையாடும் கோகோ, மூன்றாம் நிலை வீரரான ஜப்பானின் ஒசாக்காவை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
செரீனாவுக்கு 38 வயதாகிவிட்ட நிலையில், கோகோ 23 வயது இளையவர். இவர்களின் ஆட்டங்கள் டென்னிஸின் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பிரதிபலித்தன. ஆஸ்திரேலிய ஓபனின் மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்த பின்னர், முன்னாள் உலக நம்பர் ஒன் கரோலின் வோஸ்னியாக்கி ஈரமான கண்களுடன் டென்னிஸிடம் விடைபெற்றார். இது தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று வோஸ்னியாக்கி டிசம்பரில் கூறியிருந்தார். அவர் 7-5, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூரிடம் வீழ்ந்தார். இதன் மூலம், அவரது பொன்னான வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
உலக தரவரிசையில் 78 வது இடத்தில் உள்ள ஜாபூரிடம் தோற்ற பிறகு, வோஸ்னியாக்கியால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. போட்டியின் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவரது கண்கள் சிவந்து வீங்கியிருந்தன.
எட்டாவது முறையாக பட்டத்தை வெல்ல களம் இறங்கி இருக்கும் ஜோகோவிச், தனது நேர்த்தியான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய ஓபனின் நான்காவது சுற்றில் இடம் பிடித்தார். ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றால், ரஃபேல் நடால் (12 முறை பிரெஞ்சு ஓபன்) மற்றும் ஃபெடரர் (8 முறை விம்பிள்டன்) ஆகியோருக்குப் பிறகு மூன்றாவது வீரராக இருப்பார்.
ஆறு முறை சாம்பியனான பெடரர், அடுத்த சுற்றுக்கு செல்ல அதிகம் போராட வேண்டியிருந்தது. ஆஸ்திரேலிய ஓபனின் 100 வது போட்டியில் சுவிஸ் வீரர் ஜான் மில்மேனிடமிருந்து கடுமையான சவாலை எதிர்கொண்டார். பெடரர் தனது 21 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல 4-6, 7-6, 6-4, 4-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு சென்றுள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.